×

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான கட்டிடத்தை அகற்ற வேண்டும்

*மீனவர்கள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள பழமையான கட்டிடத்தை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. கொள்ளிடம் ஆறு வங்க கடலில் சென்று கலக்கும் இடத்தில் துறைமுகத்தை ஒட்டி சென்று கலந்து வருகிறது. இங்கே படகு அணையும் தளம் அருகே மீன் ஏலக்கூடமும் அதனை ஒட்டி ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டிடமும் உள்ளது. இந்த ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை கட்டிடம் மிகவும் பழமையாக இருந்து வரும் நிலையில் கடந்த ஐந்து வருட காலமாக இங்கே ஐஸ் கட்டி உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

கட்டிடம் மிகவும் பழமையாக இருந்து வருவதால் சுற்றுப்புற சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.கட்டிடத்தில் மரக்கன்றுகள் முளைத்து மரமாக தழைத்து கட்டிடத்தின் சுவரும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இத்துறைமுகத்தில் எந்நேரமும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் அனைத்து படகுகள் மூலம் 6000க்கும் மேற்பட்டோர் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

இந்த துறைமுகம் பகல் பொழுது முழுவதும் கூட்டம் நெரிசாக இருந்து கொண்டே இருக்கும். இங்கே மீன் வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் மீன் வாங்க வருபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இங்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தால் யாருக்காவது ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. தற்போது மழைக்காலமாக இருந்து வருவதால் தற்போது கட்டிடம் இடிந்து விழும் சூழ்நிலையில் இருந்து வருகிறது. எனவே ஆபத்தான நிலையில் இருந்து வரும் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுவதற்கு முன்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழையாறு மீன் மற்றும் கருவாடு வியாபாரிகள் சங்க தலைவர் பொன்னையா தெரிவித்தார்.

The post பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான கட்டிடத்தை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Palyaru ,Kollidam ,Mayiladuthurai district ,Kollidam river Bengal ,Paiyar ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் நெற்பயிரில்...