சென்னையில் 33 சதவீத சைபர் குற்ற வழக்குகள் பதிவு: மத்திய குற்றப்பிரிவு தகவல்

சென்னை: சென்னையில் கடந்த 4 மாதங்களில் பதிவு செய்த வழக்குகளில், 33% சைபர் குற்றங்கள் தொடர்பானவை, என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில், கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை பதிவு செய்த 264 வழக்குகளில், 33 சதவீதம் வழக்குகள் சைபர் குற்றங்கள் தொடர்பானவை. இந்த வழக்குகளில் 227 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 321 வழக்குகளில் விசாரணைகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் 182 வழக்குகள் நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நீதிமன்றங்கள் பிறப்பித்த 168 ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகளில் 107 வழக்குகள், மத்திய குற்றப்பிரிவு புலனாய்வாளர்களின் முயற்சியின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டன. 10 நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள 2,732 வழக்குகளில், 37 வழக்குகள் தண்டனையுடன் முடிவடைந்த நிலையில், 120 வழக்குகள் தீர்ப்பளித்து முடிக்கப்பட்டன. 16 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏப்ரல் மாதத்தில் மட்டும் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு 84 வழக்குகளை பதிவு செய்து, அதில் 46 குற்றவாளிகளை கைது செய்துள்ளது. அவர்களில் 10 பேர் ஒழுக்கக்கேடான போக்குவரத்து (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைதாகினர்.குறிப்பிடத்தக்க
வழக்குகளில், நைஜீரியர்களான பாலினஸ் மற்றும் கிளீடஸ் ஆகியோருக்கு மேட்ரிமோனியல் மோசடி வழக்கில், தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மற்றும் வேளாண்மை உழவர் கூட்டுறவு வங்கி என்ற போலி வங்கியை நடத்தி வந்த எம்பிஏ பட்டதாரி சந்திரபோசையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் பதிவு சான்றிதழை போலியாக தயாரித்ததாக டெல்லியைச் சேர்ந்த அபிஷேக் ஒருவரும், டெபாசிட் திரட்டியதாகக் கூறப்படும் அப்பன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

The post சென்னையில் 33 சதவீத சைபர் குற்ற வழக்குகள் பதிவு: மத்திய குற்றப்பிரிவு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: