கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த கிஷோர் என்ற மாணவன் சிலம்பாட்டத்தில் மாநில, தேசிய அளவில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். இவர், ஜூலை 24, மாலை 5 மணியளவில், பள்ளியில் ஈட்டி எறிதல் பயிற்சி செய்யும்போது, சக மாணவர் ஒருவர் எறிந்த ஈட்டி கிஷோர் தலையில் குத்தி பெரிய அளவில் காயத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
உடனடியாக அம்மாணவன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையிலும், பின்பு சென்னையில் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும், தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்பு மகனை இழந்து தவிக்கும் கிஷோரின் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன். இந்த விபத்திற்கு காரணம் இடவசதியில்லா பயிற்சி மைதானம் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லாததே என்று மாணவனின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
வருங்காலத்தில் சிலம்பாட்டத்தில் உலக அளவில் சிறந்த சாதனை நிகழ்த்தவிருந்த மாணவன் கிஷோர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் இதுபோல் மாணவர்களுக்கு பயிற்சி தரும்போது பாதுகாப்பு அளிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
The post கடலூரில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு: எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் appeared first on Dinakaran.
