சிஆர்பிசி சட்டப்பிரிவு 125ன்படி முஸ்லிம் பெண்களும் கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ‘குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 125ன் படி, முஸ்லிம் பெண்களும் தங்கள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு’ என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த முகமது அப்துல் சமத் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு தனது மனைவியை முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் விவாகரத்து செய்தார். ஆனாலும் அவர், மனைவிக்கு மாதம் ரூ.20,000 ஜீவனாம்சம் தர குடும்பல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் விவகாரத்து செய்ததற்கான சான்றிதழ் தன்னிடம் இருப்பதாகவும், அதை குடும்ப நல நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்றும் வலியுறுத்தினார். ஆனாலும், குடும்ப நல நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்த உயர் நீதிமன்றம், ஜீவனாம்ச தொகையை மாதம் ரூ.10 ஆயிரமாக குறைத்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘முஸ்லிம் பெண்களுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125ஐ விட முஸ்லிம் பெண்கள் (விவகாரத்து பாதுகாப்பு) சட்டம், 1986 அதிக நன்மைகளை வழங்கும்’’ என வாதிட்டார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் தனித்தனியாக, ஆனாலும் ஒரே மாதிரியான தீர்ப்பை நேற்று அறிவித்தனர்.

அதில், ‘‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125ன் படி முஸ்லிம் பெண்களும் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. இந்த சட்டம் திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். 1986ம் ஆண்டு சட்டம், மதச்சார்பற்ற, நடுநிலையான குற்றவியல் சட்டத்தை விட மேலானது அல்ல. குற்றவியல் சட்டம் முஸ்லிம் பெண்களையும் உள்ளடக்கியது’’ என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post சிஆர்பிசி சட்டப்பிரிவு 125ன்படி முஸ்லிம் பெண்களும் கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: