பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் தவித்த வண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கால நீட்டிப்பு செய்யும் கோரிக்கையினை எழுப்பியும் வருகின்றனர். இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசிநாள் என்ற நிலையில் இணைய வழி சேவை எப்பொழுது சீராகும் என்பது தெரியாத நிலையில், விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: