- தயாரிப்பாளர் சங்கம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பேரவை
- சென்னை…
- தின மலர்
சென்னை: திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்வது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்கு சமம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்ய வேண்டும். எதிர்மறையான விமர்சனங்களால் படம் தோல்வியடைந்து நஷ்டம் ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நீதிபதி கூறும்போது, நீதிபதிகளைப் பற்றி கூட மக்கள் எதிர்மறையான விமர்சனங்களை வழங்கும் காலத்தில் உள்ளோம். சமூக ஊடகங்களில் எப்படி தன்னை விமர்சித்திருக்கிறார்கள் என்று போய் பாருங்கள். அதையெல்லாம் நம்மால் தடுக்க முடியாது. பிரபல சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களின் தரத்தை மதிப்பாய்வு செய்வது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும்.
தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். விமர்சனங்களை முன்கூட்டியே முடக்க முயற்சிக்கக்கூடாது. மனுதாரரின் கோரிக்கையை இந்த நீதிமன்றத்தால் ஏற்க முடியாது. சமூக ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களால், யாரையும் தடுக்க முடியாது. நீங்கள் இங்கே ஒருவரை தடுத்தால், அஜர்பைஜானைச் சேர்ந்த மற்றொருவர் அதைச் செய்வார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?.
இதுதொடர்பாக ஒரு உத்தரவை பிறப்பித்தாலும், அந்த உத்தரவை எவ்வாறு செயல்படுத்த முடியும். செயல்படுத்த முடியாத உத்தரவுகளை பிறப்பிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று, முழு உலகமும் சமூக ஊடகங்களின் பிடியில் உள்ளது. இதுபோன்ற கருத்துகளை தடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு திரைப்படத்தை பற்றிய கருத்து நபருக்கு நபர் மாறுபடும். சிலர் ஒரு திரைப்படத்தைப் பற்றி எதிர்மறையான விமர்சனம் செய்வதால், அதுவே மற்றவர்கள் படத்தைப் பார்த்து தங்கள் சொந்த முடிவுக்கு வருவதை தடுக்காது என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post திரைப்படங்களுக்கு ஆன்லைன் விமர்சனத்துக்கு தடை விதிப்பது பேச்சு, கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதற்கு சமம்: தயாரிப்பாளர் சங்கம் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
