×

ஊழல் வழக்குகளை தூசி தட்ட தயாராகும் டெல்லி பாஜவுடன் கூட்டணி சேர எடப்பாடிக்கு கடும் நெருக்கடி: பேச தயங்கும் மாஜி அமைச்சர்கள்; தவிக்கும் ‘தாமரை’ தலைவர்கள்

சேலம்: பாஜவுடன் அதிமுக கூட்டணி சேர எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச அதிமுக தலைவர்கள் தயக்கம் அடைந்துள்ளனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் பாஜ தலைவர்கள் தவிக்கின்றனர். எடப்பாடி வழிக்கு வரவில்லையென்றால் ஊழல் வழக்குகளை தூசி தட்ட டெல்லி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜவுடன் அதிமுக கூட்டணியில் இருந்தது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜ கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி திடீரென வெளியே வந்துவிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியடைந்தன. கூட்டணி உடைவதற்கு மாநில பாஜ தலைவர் அண்ணாமலை தான் முழுக்காரணம் என அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை விட நான் தான் பெரியவர், முதல்வராக இருக்கும் தகுதி தனக்கு தான் உள்ளது என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை தாழ்த்தி பேசியதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி கூட்டணியை உடைத்துவிட்டு வெளியே வந்ததாக அதிமுகவினர் கூறினர்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்திருக்கும் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும், பாஜவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என 6 மாஜி அமைச்சர்கள் அண்மையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். ஆனால் அவர்கள் பேச்சை எடப்பாடி கேட்கவில்லை. பாஜவுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது. பிரிந்து சென்றவர்களையும் சேர்க்க வாய்ப்பு இல்லை. அதையும் தாண்டி கூட்டணி வேண்டும் என்றால் கட்சியை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள் என கூறியதால் மாஜி அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த வழியிலாவது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து விட வேண்டும் என தமிழக பாஜவின் 2ம் கட்ட தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து மாஜி மந்திரி வேலுமணியிடம் பேசியுள்ளனர். ஆனால் அவர் நீங்களே பேசிக்கொள்ளுங்கள். நாங்கள் எதைச் சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி கேட்பதற்கு தயாராக இல்லை என கை விரித்துவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொள்ள முடியாமல் பாஜ நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பாஜ தலைவர் அண்ணாமலையை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினால் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு வருவார் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அண்ணாமலையை நீக்குவோம் என பாஜ மேலிடம் தெரிவித்துவிட்டது.

எனவே, எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்தால் மட்டுமே மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையயை தூக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, எடப்பாடியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். பதிலுக்கு எடப்பாடியும், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்களும் அண்ணாமலையை விமர்சித்து பேசினர். இதனால் எடப்பாடியை கண்டித்து பாஜவினர், அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினரும் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில், அதிமுகவுடன் கூட்டணி சேரக்கூடாது என்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார்.

இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் மெகா கூட்டணியை தொடங்கி அதிமுக தலைமையில் கூட்டு அமைச்சரவை அமைப்பதற்கு இப்போதே பாஜ தயாராகிவிட்டது. இதன் காரணமாகத்தான் கூட்டணியில் சேர வேண்டும் என அதிமுகவுக்கு பாஜ நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பாஜவுடன் கூட்டணி சேரவில்லை என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் (ஊழல் வழக்குகளில்) டெல்லி மேலிடம் தயாராக உள்ளது. இது அதிமுகவை அழிப்பதற்கான முயற்சியாகவே நாங்கள் கருதுகிறோம். கூட்டணி மந்திரி சபை என ஆசைக்காட்டி அதிமுகவை முற்றிலும் அழித்துவிடுவார்கள். அவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை போக போகத்தெரியும்,’’ என்றனர். பாஜ தலைவர் அண்ணாமலையை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினால் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு வருவார் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அண்ணாமலையை நீக்குவோம் என பாஜ மேலிடம் தெரிவித்துவிட்டது.

The post ஊழல் வழக்குகளை தூசி தட்ட தயாராகும் டெல்லி பாஜவுடன் கூட்டணி சேர எடப்பாடிக்கு கடும் நெருக்கடி: பேச தயங்கும் மாஜி அமைச்சர்கள்; தவிக்கும் ‘தாமரை’ தலைவர்கள் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Delhi BJP ,Salem ,AIADMK ,Edappadi Palaniswami ,BJP ,Lotus ,
× RELATED ‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி