கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டாய முகக்கவசம் இன்று முதல் அமல்!!

சென்னை : கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டாயமாக முகக்கவசம் அணிவது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தினசரி தொற்று பாதிப்பு 10,000 ஆக பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தினம் தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கு விசாரணைகள் கடந்த வாரம் முதல் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.

கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் நீதிமன்றத்திற்கு வரக்கூடிய அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.தனபால் வெளியிட்ட அறிவிப்பாணையில்,”நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தனி மனித இடைவெளி பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவுவதை கடைபிடிக்க வேண்டும். வழக்கு பட்டியலில் இல்லாத வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்,”என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த உத்தரவு இன்று முதல் நீதிமன்றத்தில் அமலுக்கு வந்தது. இதனால் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக நீதிமன்ற வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டாய முகக்கவசம் இன்று முதல் அமல்!! appeared first on Dinakaran.

Related Stories: