×

தொடர்ந்து பெய்த மழையால் சேறும் சகதியாக மாறிய சாலை

*சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

மானாமதுரை, நவ.6:மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார் நகரில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டதால் ரோடுகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. ரோட்டை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார் நகர் 20 ஆண்டுகளுக்கு முன் உருவாகியது.

தற்போது அங்கு 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதி மாங்குளம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்த போது சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டிருந்தது. இப்பகுதி கடந்த ஆண்டு மானாமதுரை நகராட்சியுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அலங்கார் நகர், மேட்டுத்தெரு பகுதியில் நகராட்சி சார்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்க சிமெண்ட் ரோட்டை உடைத்து குழாய்கள் பதிக்கும் பணி கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.உடைக்கப்பட்ட பகுதியில் ரோடு போடாத நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள மெயின் ரோடுகள், முக்கிய தெருக்கள் மக்கள் கால் வைக்க முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அத்தியாவசிய தேவையான பால், காய்கறி கூட வாங்க வெளியே சென்று திரும்பி வர முடியாத அளவிற்கு சிரமப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இப்பகுதி உருவாகி இருபதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. முக்கிய தெருக்களுக்கு மட்டும் சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதன்பின் இன்னும் சில பகுதிகளுக்கு தார்ச்சாலை அமைக்கவில்லை.கடந்த செப்டம்பர் மாதம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப்புகளை பதித்தபின் ரோடை சரி செய்யாமல் ஒப்பந்ததாரர் உள்ளார். இதனால் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாத ரோடு படுமோசமாக உள்ளது. எனவே நகராட்சி ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு ரோட்டை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் நிரந்தர சாலையை ஏற்படுத்தவும் வேண்டும் என்றார்.

The post தொடர்ந்து பெய்த மழையால் சேறும் சகதியாக மாறிய சாலை appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Manamadurai Thayamangalam ,Amankar Nagar ,20 Amankar Nagar ,Thayamangalam Road, Manamadurai ,Dinakaran ,
× RELATED அரிமண்டபத்தில் சாலையை மூழ்கடித்து...