×

அரிமண்டபத்தில் சாலையை மூழ்கடித்து செல்லும் கால்வாய் நீர்: கிராம மக்கள் கடும் அவதி

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம், மேலப்பசலை பஞ்சாயத்திற்கு உட்பட்டது அரிமண்டபம் கிராமம். இந்த கிராமத்திற்கு செல்ல வசதியாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை சேதமடைந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைப்படி தமிழ்நாடு அரசு புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து சாலை பணி நடைபெற்று வந்தது. ஆனால், தொடர் மழையால் தற்போது சாலை பணி நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

தொடர் மழையால் அரிமண்டபம் கிராமம் அருகே செல்லும் நாட்டார் கால்வாயில் தற்போது அதிகளவில் தண்ணீர் செல்கிறது. தார் சாலையை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் இந்த கிராமம் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மானாமதுரை சென்றுவர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், தார் சாலையை மூழ்கடித்து கால்வாய் நீர் செல்வதால் பஸ்கள், ஆட்டோக்கள் வந்துசெல்ல முடியவில்லை. பஸ்கள் ஊருக்கு வெளியே நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கி செல்லும் நிலை உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: அரிமண்டபம் கிராம நுழைவிடத்தில் நாட்டார் கால்வாயில் சிறிய பைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சாலையை மூழ்கடித்து கால்வாயில் தண்ணீர் செல்கிறது. இதனால் அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு செல்லும் அரசு பஸ்சை ஊருக்கு வெளியே நிறுத்தி பயணிகளை இறக்கி செல்லும் நிலை உள்ளது. ஆட்டோ உள்ளிட்ட மற்ற வாகனங்களும் இந்த பகுதியை ஆபத்தான வகையில் கடந்து செல்கின்றன. எனவே, பைப் பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரிமண்டபத்தில் சாலையை மூழ்கடித்து செல்லும் கால்வாய் நீர்: கிராம மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Arimandapam ,Manamadurai ,Sivaganga district ,Manamadurai Union ,Malapsalai Panchaya ,Dar Road ,Tamil Nadu government ,Grama ,Melika Katum Avadi ,
× RELATED பண்ணைக்குட்டைகள் அமைக்க வலியுறுத்தல்