முழுமையாக சேதமடைந்து விட்டதால் புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும்

*பொதுமக்கள் வேண்டுகோள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காலனி வீடுகள் சேதமடைந்து இடிந்து விழுந்து வருகின்றன. அவைகளை பராமரிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் காலனி வீடுகள் கட்டப்பட்டன. பெரும்பாலும் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மக்களே இந்த வீடுகளில் வசித்து வருகின்றனர். சுமார் 20 வீடுகள் முதல் மக்கள் தொகைக்கு ஏற்பட 100 வீடுகள் கொண்ட காலனிகளும் அமைக்கப்பட்டன.

இவ்வாறு கடந்த 30ஆண்டுகளுக்கு முன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மாவட்டம் முழுவதும் கட்டப்பட்டன. நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் கிராமப்புறங்களில் இவ்வாறு கட்டப்பட்ட வீடுகளில் சிலர் மட்டும் வீடுகளை மராமத்து செய்து இருந்து வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள ஏராளமானோர் கட்டப்பட்ட நிலையில் உள்ள வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலே படிப்படியாக மராமத்து பணி செய்திருக்க வேண்டும். ஆனால் 25ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள ஏராளமான வீடுகளில் இதுவரை எந்த மராமத்து பணிகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட வில்லை.

இதனால் வீட்டின் உட்பகுதியில் மேற்கூறை இடிந்து விழுவது, சுவர் இடிந்து விழுவது என அவ்வப்போது சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் சிவகங்கை பழமலை நகர் நரிக்குறவர் காலனியில் வீடு இடிந்து ஒருவர் பலியானார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். காளையார்கோவில் அருகே அழகாபுரி காலனியில் ஒரு வீடு இடிந்தது. சிவகங்கை அருகே இடையமேலூரில் பல வீடுகள் வசிப்பதற்கு தகுதியற்ற நிலையில் முழுமையாக சேதமடைந்துள்ளன.

மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இதே நிலையிலேயே மற்ற வீடுகளும் இருந்து வருகின்றன. கான்கிரீட் வீடுகளான இவற்றின் மேல்தளத்தை தாங்கிப் பிடிக்கும் பில்லர் அமைக்கப்பட வில்லை. அதனால் இவ்வித பிடிமானமும் இல்லாமல் மேல்தளம் உள்ளன. அனைத்து வீட்டின் மேற்புறம் உள்ள கான்கிரீட் தளம் பகுதி பகுதியாக உடைந்து விழுந்து வருகிறது.
சிமெண்ட் உதிர்ந்து உள்ளேயுள்ள கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் அனைத்து வீடுகளும் உள்ளது.

வீட்டின் சுவரிலும் பெரிய அளவில் விரிசல் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் வீடுகள் விழுந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சுவரோ, கான்கிரீட் மேல்தளமோ இடிந்து விழுந்தால் தப்பித்து போக முடியாத நிலையில் பயத்தோடு இங்கு வசிப்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

காலனி வீட்டில் வசிப்பவர்கள் கூறியதாவது, மேல் தளத்திலிருந்து விழும் சிமெண்ட் கட்டிகளால் அடிக்கடி காயம் ஏற்பட்டு வருகிறது. வீட்டின் நிலை குறித்து பலமுறை அரசிற்கு தெரியப்படுத்தியுள்ளோம். வேறு வழி இல்லாததால் நாங்கள் இங்கு வாழ்ந்து வருகிறோம். ஏழ்மை நிலையில் உள்ள நாங்கள் வீடுகளை மராமத்து பணி செய்யும் நிலையில் இல்லை. வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. இனி மராமத்து பணிகள் செய்தாலும் பயன் இல்லை. எனவே இந்த வீடுகளுக்குப்பதில் புதிய வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post முழுமையாக சேதமடைந்து விட்டதால் புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: