இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் விவரம் சரிபார்க்க குழு அமைப்பு: பள்ளிக்கல்வி துறை தகவல்

சென்னை: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகள் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இதற்கென்று தனியாக விண்ணப்பப்பதிவு மேற்கொள்ள செய்து, தகுதியானவர்களுக்கு அந்த இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இடங்கள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தி வருகிறது.

இந்நிலையில் 2022-23 மற்றும் 2023-24ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகளின் விவரங்கள் குறித்து சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்களின் தலைமையில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர், கண்காணிப்பாளர் அல்லது உதவியாளர் ஆகியோர் குழுவில் இடம்பெற உள்ளனர்.

இந்த குழுவினர் 2022-23 மற்றும் 2023-24ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் பட்டியலில், அது சார்ந்த வகுப்புகளில் அவர்கள் சேர்ந்து படிக்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். அதில் நீண்டவிடுப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள் இருந்தால் அவர்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்க செய்யவேண்டும். தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விவரங்கள், பள்ளிகளின் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

The post இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் விவரம் சரிபார்க்க குழு அமைப்பு: பள்ளிக்கல்வி துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: