கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். நெல்லையை சேர்ந்தவர் முத்துபாலன் (40). இவர் கோவை டவுன்ஹாலில் டாஸ்மாக் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். அதிமுக டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் மாநில துணை தலைவராக உள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருக்கமான வட்டத்தில் இவரும் ஒருவர் என கூறப்படுகிறது. இவரது வீடு கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ளது. மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டிற்கு நேற்று காலை 6 மணிக்கு 2 கார்களில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்ததும், கதவுகளை பூட்டினர்.

பின்னர், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையையொட்டி அவரது வீடு முன்பு 10 பேர் கொண்ட அதிவிரைவுபடை போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை ராமநாதபுரம் ஷியாம் நகரை சேர்ந்தவர் அருண். இவர் திருச்சி ரோடு ஹைவேஸ் காலனியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

The post கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: