கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் பக்தர்களை குறிவைத்து நடத்தும் சூதாட்டம்

கோவை : கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் மலை பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவையை கடந்து சென்றால் 7-வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும். இந்த மலை பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும்.

இந்த மலை பாதையில் பக்தர்களுக்கு ஏற ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை அனுமதி வழங்கப்படும். இந்த நாட்களில் ஏராளமானவர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் இறுதி முதல் கோவை மட்டுமின்றி சென்னை, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து இளைஞர்கள், வாலிபர்கள், முதியவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மலையேற வரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை பார்க்கிங் செய்ய வசதியாக வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் மலையடிவாரத்தில் இடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் மலையேறும் பக்தர்களை குறி வைத்து சூதாட்ட கும்பல் ஒன்று அப்பகுதியில் சுற்றி வருகிறது. இந்த சூதாட்ட கும்பல் பக்தர்களிடம் காலை 6 மணிக்கே தங்களின் வேட்டையே துவங்குகின்றனர்.

பிதாமகன் திரைப்பட பாணியில் சூதாட்டம் நடத்தப்படுகிறது. பக்தர்களிடம் ரூ.500 கட்டினால், ரூ.1000 கிடைக்கும் என கூறுகின்றனர். இதனை நம்பி மலையேற்றத்தில் ஈடுபடும் இளைஞர்கள், வாலிபர்கள், பக்தர்கள் ஏமாந்து வருகின்றனர். இந்த சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்களிடம் மூன்று கேரம் போர்டு ஸ்ட்ரைக்கர் காயின் உள்ளது. இதில், ஒரு ஸ்ட்ரைக்கரில் நம்பர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். ஒரு டேபிள் மீது மூன்று ஸ்ட்ரைகர் காயினை சூதாட்ட நபர் கையில் வைத்து மாற்றி, மாற்றி சுற்றுவர்.

பின்னர், எந்த ஸ்ட்ரைக்கரில் நம்பர் உள்ளது என்பதை நாம் கூறி, அதில் பணத்தை கட்ட வேண்டும். நம்பர் உள்ள காயின் மீது எவ்வளவு பணம் கட்டப்படுகிறதோ? அதற்கு இரட்டிப்பு பணம் அளிக்கப்படும் என கூறுகின்றனர். இதற்கு குறைந்தபட்சம் ரூ.500 தான் கட்ட வேண்டும் என விதிமுறையை வைத்துள்ளனர்.

இந்த சூதாட்டம் நடத்தும் கூட்டத்தை சேர்ந்தவர் பக்தர்களில் ஒருவர் போல் நின்று முதலில் பணத்தை கட்டி வெற்றி பெறுவார். இதனை பார்த்த பக்தர்கள் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் விளையாட்டை துவங்குகின்றனர். கூகுள்-பே மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி கூட இந்த விளையாட்டில் இருப்பதால், பக்தர்கள் பலர் சூதாட்டத்தில் பங்கேற்று தோல்வி அடைந்து வெறும் கையுடன் வீட்டிற்கு செல்கின்றனர்.

இது மிகவும் மோசமான சூதாட்டங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இப்போட்டியில், சூதாட்டக்காரர்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் பணத்தை கட்டி ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் பணத்தை கேட்டால், சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களை மிரட்டுகின்றனர்.

சூதாட்டம் ஆடும் இடத்தில் 3 முதல் 4 பேர் வரை சூதாட்டம் நடத்தும் கூட்டத்தை சேர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். தினமும் காலை முதல் இரவு வரை சூதாட்டம் நடந்து வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே வெள்ளிங்கிரி அடிவாரத்தில் சூதாட்டம் ஜோராக நடந்து வரும் நிலையில், போலீசார் சூதாட்ட கும்பலின் நடவடிக்கையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் பக்தர்களை குறிவைத்து நடத்தும் சூதாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: