கோவையில் இரிடியம் ஆசை காட்டி ரூ.1.30 கோடி மோசடி இருவர் பிடிபட்டனர்

கோவை: கோவையில் இரிடியம் ஆசை காட்டி ரூ.1.30 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (44). விவசாயி. இவருக்கு ஏற்கனவே அறிமுகமான தர்மபுரி கொண்டாலப்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன்(53), கோவையில் இரிடியம் விற்பவர்களை அணுகினால் கோடி, கோடியாக சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி கடந்த 2019ல் குமார், சந்திரசேகருடன் கோவை சென்றார். கோவையில் பீளமேடு சித்ரா பகுதியை சேர்ந்த சிவாஜி (53) என்பவரை சந்தித்தனர்.

அப்போது அவர், ‘‘நான் இரிடியத்தை வௌிநாட்டிற்கு ரகசியமாக விற்பனை செய்து வருகிறேன். இரிடியத்தை உடனடியாக நினைத்த நேரத்தில் விற்க முடியாது. அதற்கு குறிப்பிட்ட காலத்தில் பூஜை செய்து சக்தி ஏற்ற வேண்டும். இரிடியத்தை இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பார்ட்டிகளுக்கு அனுப்ப பணம் தேவை. அங்கு அதிக சக்தி கொண்ட இரிடியம் கலசம் 3 ஆயிரம் ேகாடி ரூபாய் வரை விற்பனையாகும். இந்த கலசம் இருப்பவர்கள் ராஜ யோகத்தை பெறுவார்கள். தொழிலில் அமோக வெற்றி கிடைக்கும்’’ என சினிமா பாணியில் கூறினார். மேலும் தனி அறையில் பூஜை போட்டு சாம்பிராணி புகை மூட்டத்தின் நடுவில் சிறிய கலசம் ஒன்றையும் குமார், சந்திரசேகரன் ஆகியோரிடம் காட்டியுள்ளார்.

இதை பார்த்துவிட்டு சென்ற சில நாட்களில் குமார் தனது விவசாய நிலத்தை விற்று 1.30 கோடி ரூபாயை சந்திரசேகரன் மற்றும் சிவாஜியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் பணம் வாங்கி பல மாதங்களாகியும் கலசத்தை விற்கவில்லை. கொடுத்த பணத்தையும் தரவில்லை. இதையடுத்து குமார் தனக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்து விட்டதாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் சிவாஜி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தனியார் நிறுவன ஊழியரான சந்திரசேகரன் மகன் அஜய்யை (25) தேடி வருகின்றனர்.

The post கோவையில் இரிடியம் ஆசை காட்டி ரூ.1.30 கோடி மோசடி இருவர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: