கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்: கோவளத்தில் பரபரப்பு

திருப்போரூர்: கோவளத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்தக்கோரி பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம், செம்மஞ்சேரி, குன்றுக்காடு ஆகிய கிராமங்களுக்கு தையூர் ஏரியில் இருந்து கிணறு தோண்டப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இருப்பினும், கிராம மக்களுக்கு போதிய அளவில் குடிநீர் கிடைக்காததால், ரூ.12 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையூர் ஊராட்சி மன்றத் தலைவர் குமரவேல் தலைமையில், அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனால், கிணறு தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை கோவளம் பேருந்து நிலையத்தில், கோவளம் கிராம மக்களில் ஒரு பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், தையூர் மற்றும் கோவளம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும், தையூர் கிராம மக்களின் அச்சத்தை போக்கி குடிநீர் திட்டத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்லி திட்டத்தை செயல்படுத்த அவர்களின் ஒத்துழைப்பை பெற வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தனியார் நிறுவனங்கள், தனியார் நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்களுக்கு இணைப்பு வழங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்: கோவளத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: