×

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்: திமுகவினர் வீடு,வீடாக சென்று மக்களை சந்திக்கின்றனர்

சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து திமுகவினர் வீடு,வீடாக சென்று மக்களை சந்திக்கின்றனர். திமுகவின் மதுரை பொதுக்குழு கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதில் திமுகவின் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வீடாகச் சென்று, மக்களை சந்தித்து குறைகளை கேட்கவும், அதனுடன் திமுக உறுப்பினர் சேர்க்கையையும் மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ெசன்னையில் இன்று தொடங்கி வைத்து விளக்கி பேசுகிறார். அடுத்து, 38 மாவட்டங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஓரணியில் தமிழ்நாடு குறித்து விளக்குகின்றனர். நாளை திமுகவில் உள்ள 76 மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று மக்களை திமுகவினர் சந்திக்க உள்ளனர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் எல்லாரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்கிறார்கள். திமுக செயல் வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரைச் செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பரப்புரையின் முக்கிய அம்சமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களையும் 100 சதவீதம் சந்தித்திருக்க வேண்டும். எதிர்கட்சியினர் இல்லங்களுக்கும் நேரில் சென்று பேச வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டும் இல்லை. இது தமிழ்நாட்டு மக்களை நம் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் ஒரு முன்னெடுப்பு. வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜென்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், பிஎல்சி உறுப்பினர், திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கொண்ட குழுவாக சேர்ந்துதான் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்கள் நடைபெற உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை திருவிழா போல நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

The post ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்: திமுகவினர் வீடு,வீடாக சென்று மக்களை சந்திக்கின்றனர் appeared first on Dinakaran.

Tags : First Minister ,Oraniki Tamil Nadu ,K. Stalin ,Chennai ,Madurai General Committee ,Thimugavin ,Chief Minister ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்