சென்னை கே.கே. நகரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகம் திறப்பு: தெலங்கானா ஆளுநர் தமிழிசை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை கே.கே.நகரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலக கட்டிடத்தை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். சென்னை, கே.கே.நகரில் உள்ள டாக்டர் ராமசாமி சாலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் பேரமைப்பு தலைமை அலுவலகம், கருத்தரங்க கூட்டம் நடைபெறும் இடம், சர்வீஸ் அப்பார்ட்மென்ட், ஆலோசனை அரங்கம், வணிகர்கள் தங்குவதற்கான அறைகள், வாகன நிறுத்தும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்க, பொருளாளர் சதக்கத்துல்லா கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதேபோல், எஸ்.என்.ஜே நிர்வாக இயக்குனர் எஸ்.என்.ஜெயமுருகன், ஆச்சி குழுமம் நிர்வாக இயக்குனர் பத்மசிங் ஐசக் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களின் பிரபலங்கள் குத்துவிளக்கை ஏற்றினர். இதில் பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.

இக்கட்டிடத்தில் ஒரு பகுதியான சிவந்தி ஆதித்தனார் வளாகத்தை லெஜண்ட் குழும தலைவர் சரவணனும், இதேபோல், யோகரத்தினம் லெஜண்ட் சரவணன் அரங்கத்தை  கோகுலம் குழும தலைவர் கோகுலம் கோபாலனும் திறந்து வைத்தனர். இதுமட்டுமின்றி, சிட்டி யூனியன் வங்கி அரங்கத்தை அதன் முதன்மை செயல் அதிகாரி காமகோட்டியும், பேரமைப்பின் அலுவலகத்தை போத்தீஸ் ரமேஷும் திறந்து வைத்தனர். ஹட்சன் அக்ரோ நிர்வாக இயக்குனர் சந்திரமோகனும் திறந்து வைத்தார். அதேபோல், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேரமைப்பின் சிறப்பு மலரை ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து நலிந்த வணிகர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குனர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார். மேலும், இதில் முன்னாள் தலைமைச்செயலர் இறையன்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோசம், மெடிமிக்ஸ் அனுப், ஜமாலுதீன், கிருஷ்ணமூர்த்தி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ பிரபாகரராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது: தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் 40 ஆண்டுகால சரித்திர சாதனையாக இந்த புதிய கட்டிடம் திறப்பினை பார்க்கிறேன். பல்வேறு இன்னல்களை கடந்து, இதனை செய்து முடித்துள்ளோம். அதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், இந்த சங்கத்தின் கட்டிடம் உருவாகவும், இதன் மேன்மைக்கும் உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நன்றி. அதேபோல், வெளிநாட்டு நிறுவனங்களையும், வெளிநாட்டு வங்கிகளையும் வணிகர்கள் தவிர்க்க வேண்டும். கொரோனா காலத்தில் நம்நாட்டிற்கு உதவியது நம்முடைய உள்நாட்டு நிறுவனங்களும், வங்கிகளும் தான். உள்நாட்டு வங்கிகள் வணிகர்களுக்கு எண்ணற்ற உதவிகளை வழங்குகிறது. அதற்கு பேரமைப்பு உதவி செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post சென்னை கே.கே. நகரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகம் திறப்பு: தெலங்கானா ஆளுநர் தமிழிசை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: