×
Saravana Stores

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள்

சென்னை: திமுக முப்பெரும் விழா சென்னையில் இன்று நடக்கிறது. விழாவில் விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் சென்னைக்கு அணி திரண்டு வந்துள்ளனர். திமுக முப்பெரும் விழா இந்தாண்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இன்று மாலை 5 மணியளவில் நடக்கிறது. இந்த ஆண்டு திமுகவின் 75வது ஆண்டு பவள விழா என்பதால் முப்பெரும் விழா முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. திமுக முப்பெரும் விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றுகிறார். விழாவில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் பெரியார் விருது-பாப்பம்மாள், அண்ணா விருது-அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது- எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது- வி.பி.இராஜன் ஆகியோர் பெறுகின்றனர். மு.க.ஸ்டாலின் விருதை தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒன்றியம், நகரம் பகுதி, பேரூர் அளவில் சிறப்பாக செயல்படும் நபர் ஒருவருக்கு நற்சான்று, பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். திமுக தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. எனவே திமுகவின் பவள விழா ஆண்டு இது. அதனை குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பேர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா அரங்கில் திமுக சாதனைகள் குறித்த கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா அரங்கைச் சுற்றிலும் 50 அடி உயரத்தில் திமுக கொடிகள் பறக்க விடப்படுகிறது. விழா மேடைக்கு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வண்ணமய விளக்குகளுடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் ஏஐ தொழில் நுட்ப வசதி இந்த மாநாட்டில் பயன்படுத்தப்பட உள்ளது. அனைவரும் நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் வகையில் மெகா டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட உள்ளது. திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து நேற்று மாலை சென்னைக்கு தொண்டர்கள் வரத் தொடங்கினர். தொண்டர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் திமுக சார்பில் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் சென்னையை நோக்கி வரத் தொடங்கியுள்ளதால் சென்னை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தொண்டர்கள் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அண்ணா அறிவாலயம், அன்பகம்
முப்பெரும் விழாவையொட்டியும், திமுகவின் பவளவிழாவை ஒட்டியும் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் மிளிர்கிறது. அறிவாலயத்தின் நுழைவாயிலில் ஆர்ச் வடிவ வண்ண விளக்குகள் காண்போரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அறிவாலயத்திற்கு உள்ளே அண்ணா மற்றும் கலைஞரின் திருவுருவச் சிலைகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், திமுக பவளவிழா ஆண்டையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்ட பவள விழா ஆண்டு லட்சினையும் லேசர் ஒளிக்கற்றைகள் மற்றும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அதற்குமேல் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னமும் மிளிர்கிறது. சாலையில் செல்பவர்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகமும்‌, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அங்கு திமுக பவள விழா ஆண்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள லட்சினையும் மின்விளக்குகளால் ஒளர்கிறது.

* வைரலாகும் திமுக பவள விழா பாடல்
திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெற உள்ளது. இதற்காக நேற்று முன்தினம், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் திமுக பவள விழா லட்சினையை திறந்து வைத்தார். இந்நிலையில், திமுக பவள விழாவிற்கான சிறப்பு பாடலும், திராவிட மாடல் திட்டங்கள் குறித்த பாடலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல்களை ‘பென்’ நிறுவனம் தயார் செய்துள்ளது. இந்த பாடல் தற்போது அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,Coral Festival ,DMK Tripartum Festival ,Nandanam ,YMCA… ,
× RELATED சொல்லிட்டாங்க…