×
Saravana Stores

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம்; அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம்: எடப்பாடி திடீர் கட்டளை


சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘2026ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படும் மாற்றுக் கட்சி தலைவர்களை விமர்சிக்க வேண்டாம்’ என்றார். மேலும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடக்கும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள இப்போதே அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கியுள்ளன. திமுக குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பணிகளை தொடங்கி உள்ளது. 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை திமுக மேலிடம் நியமனம் செய்து பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். கடந்த சில நாட்களாக சீமான் கட்சிக்கும், விஜய் கட்சிக்கும் மோதல் உருவாகியுள்ளது.

அதேபோன்று, அதிமுக தலைமை மீதும் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி பணிகளை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சில புதிய நடவடிக்கைகளை எடுக்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதவிர தேர்தல் கூட்டணி மற்றும் பிரசாரம் தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுக்கப்பட உள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த, மாநில கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், அதிமுக கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர்கள் சிலர், ‘அதிமுக கட்சியில் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதிமுக தலைமை தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று காரசாரமாக பேசியதாக கூறப்படுகிறது. கூட்டத்தின் இறுதியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ேதர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும், அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்கட்சி பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் சொல்லி, கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர வேண்டும். 2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும்.

தற்போதுள்ள கூட்டணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும். புதிய கட்சிகள் நம்முடன் வருவார்கள். அதனால், அண்ணாமலை, திருமாவளவன், சீமான், விஜய் உள்ளிட்ட கட்சி தலைவர்களை பற்றி தேவையில்லாமல் அதிமுக நிர்வாகிகள் விமர்சிக்க வேண்டாம். இதனால் வலுவான கூட்டணி அமையாமல் போகலாம். அதே நேரம் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருப்போம். சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க டிசம்பர் இறுதிக்குள் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்’’ என்றார்.

The post அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம்; அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம்: எடப்பாடி திடீர் கட்டளை appeared first on Dinakaran.

Tags : Karasara ,Atamuga District Secretaries ,Annamalai ,Edappadi ,Chennai ,Adimuka District Secretaries ,Edappadi Palanisami ,Adimuga ,2026 elections ,General Committee of the Party ,Atamuka District Secretaries ,Dinakaran ,
× RELATED விஐபி வழக்குகளில் குறிப்பிட்ட...