சென்னையில் கடந்த 2 நாட்களில் சாலையில் திரிந்த 23 மாடுகள் பிடிப்பு: உரிமையாளர்களுக்கு அபராதம்

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களில் தீவிர சோதனை நடத்தி, சாலையில் திரிந்த 23 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளை சாலைகளில் தன்னிச்சையாக விடுவதன் மூலம் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதோடு, அவ்வப்போது சாலையில் நடந்து செல்லும் மக்களைத் தாக்கி விபத்தும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் உரிய சட்ட விதிகளின்படி, சாலையில் தன்னிச்சையாக நடமாடும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், சாலையில் தொடர்ந்து நடமாடும் மாடுகளால் பொதுமக்கள் தாக்கப்பட்டு காயமடையும் சூழல் ஏற்படுகிறது. இதனை தடுத்திடும் வகையில் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் கள ஆய்வு மேற்கொண்டு, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் கடந்த 2 நாட்களில் மட்டும் 23 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 3,859 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவல்லிக்கேணி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் மாநகராட்சி ஊழியர்களால் நேற்று பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post சென்னையில் கடந்த 2 நாட்களில் சாலையில் திரிந்த 23 மாடுகள் பிடிப்பு: உரிமையாளர்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: