சென்னையில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் பலத்த காற்றுடன் மழை: குளுகுளுவென மாறியதால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் காலை முதல் வெயில் வாட்டி எடுத்த நிலையில், மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், குளுமையான நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருந்து வருகிறது. காலை 9 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாலை 5 மணி வரை வெயில் நீடித்தது. அதே நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் என்பது இரவு வரை நீடித்தது.

இதனால், சென்னைவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதேபோல நேற்றும் காலை முதல் சென்னை முழுவதும் வெயில் வாட்டி எடுத்தது. இந்த நிலையில் மாலை 4.50 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து பகலை இரவாக்கியது. தொடர்ந்து பலத்த காற்றுடன், மழை பெய்ய தொடங்கியது. மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், ராயப்பேட்டை, அண்ணாசாலை, எழும்பூர், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு, அமைந்தகரை, அண்ணாநகர், பெரம்பூர், பாரிமுனை, தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த திடீர் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் குளுகுளுவென மாறியது. இவ்வளவு நாள் வெயிலில் சிக்கி தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் திடீரென பெய்த மழையால் தனியார் நிறுவனங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்ற காட்சியை காண முடிந்தது. பல இடங்களில் வாகனப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

The post சென்னையில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் பலத்த காற்றுடன் மழை: குளுகுளுவென மாறியதால் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: