சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கலையரங்கம், சமுதாய நலக்கூடங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடங்கள், கலையரங்கங்களை இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம், என்று மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநகராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடங்கள், கலையரங்குகள் போன்றவற்றை மக்கள் பயன்படுத்துவதற்கு, தற்போது சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, தகுந்த ஆவணங்களுடன் உரிய தொகையை வங்கி வரைவோலையுடன் குறிப்பிட்ட நாளில் யார் முன்னதாக செலுத்துகிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முன்பதிவு செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு, குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். சென்னை மாநகராட்சியில் இயங்கும் நிறுவனங்களின் முதலீட்டு தொகையின் அடிப்படையில் வசூலிக்கப்படும் நிறும வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கட்டுமான பணிகளுக்கான உரிம மற்றும் இடிபதற்கான உரிம பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கொசு ஒழிப்பு பணிகளுக்காக, வாகனத்தில் பொருத்தப்பட்டு இயக்கக்கூடிய பெரிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் 30; கையினால் எடுத்து செல்லக்கூடிய 100 சிறிய வகை புகைப்பரப்பும் இயந்திரங்கள் ஆகியவை 2.53 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

மணலி மண்டலம், 16வது வார்டு, மணலி இணைப்பு சாலையில் இருந்து பர்மா நகர் இணைப்பு சாலை வரை சாலை அமைக்கும் பணி மேற்கொண்ட ஒப்பந்தாரர் பணியில், குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அந்த ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்க அனுமதி வழங்கப்படுகிறது. பெரம்பூரில் உள்ள சென்னை தெலுங்கு தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக உள்ளது. எனவே, அப்பள்ளி, எம்.எச்.சாலையில் உள்ள நடுநிலை பள்ளியுடன் இணைக்கப்படுகிறது உள்ளிட்ட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

* மண்டலத்துக்கு ஒரு மறுவாழ்வு மையம்
மாநகராட்சி கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் பிரியதர்ஷினி பேசுகையில், ‘‘சென்னையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதுடன், டாக்டர்களும் பணியில் இருப்பதில்லை. டாக்டர் பணியில் இல்லாததால், புளியந்தோப்பு பகுதியில் ஒரு பெண் உயிரிழந்தார். மாநகராட்சி பள்ளிகளில் போதையால் மாணவர்கள் அடிமையாவது அதிகரித்து வருகிறது. எனவே, மண்டலத்திற்கு ஒரு போதை மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும்’’ என்றார்.

The post சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கலையரங்கம், சமுதாய நலக்கூடங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: