செங்கல்பட்டு to டெல்லி

நன்றி குங்குமம் தோழி

தமிழ் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது

தமிழகம் தந்த பாலிவுட் ராணி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு, அவரின் கலைஉலகப் பயணத்தை கௌரவிக்கும் விதமாக 2023ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.தமிழகத்தைச் சேர்ந்த வஹீதா தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி என பல்வேறு மொழித் திரைப்படங்களில் சுமார் 68 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வரூபம்-2 படத்தில் நடிகர் கமலஹாசனுக்குத் தாயாக மீண்டும் தமிழில் நடித்தார்.

வஹீதா தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1938ல் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை மாவட்ட நீதிபதியாக இருந்தவர். பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, நடனத்தின் மீது கொண்ட காதலால் பரதநாட்டியத்தை சிறுவயதில் இருந்தே முறையாகக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். மருத்துவராக வேண்டும் என்பதும் இவரின் சிறுவயது கனவாகவும் இருந்திருக்கிறது. வஹீதாவின் தந்தை திடீர் மறைவு காரணமாக இவர் குடும்பம் பொருளாதாரச் சிக்கலில் சிக்க, வருமானத்திற்காக சினிமாவில் நடிக்க வேண்டிய கட்டாயம் வஹீதாவிற்கு ஏற்பட்டுள்ளது. இவர் நன்றாக நடனம் ஆடுபவர் என்பதால், திரைத்துறை வஹீதாவை இருகரம் நீட்டி வரவேற்றுள்ளது.

1955ம் ஆண்டு தெலுங்கு ‘ரோஜுலு மராயி’ பாடலில் ‘எருவக சாகலோய்’ படத்தில் வஹீதா அறிமுகமானார். தொடர்ச்சியாக எம்ஜிஆர் நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் பாடல் வஹீதாவை அனைவரிடத்திலும் மிகவும் பிரபலமாக்கியது.

1956ம் ஆண்டு ராஜ் கோஸ்லா இயக்கிய ‘சிஐடி’ படத்தில் தேவ் ஆனந்திற்கு ஜோடியாக வஹீதா பாலிவுட்டில் அறிமுகமானார். பாலிவுட் ரசிகர்களுக்கு வஹீதாவை மிகவும் பிடித்துப்போக, தொடர்ந்து ரஹ்மான் ககாஸ் கே பூல், சாஹிப் பிவி அவுர் குலாம், கைடு, காலா பஜார், ரூப் கி ராணி சோரோன் கா ராஜா, ராம் அவுர் ஷியாம், ஆத்மி, தீஸ்ரீ கசம் மற்றும் காமோஷி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட் திரை வரலாற்றில் தனக்கென முக்கிய இடத்தைப் பிடித்தார் வஹீதா.

தொடர்ந்து தேவ் ஆனந்துடன் ஜோடி சேர்ந்து வஹீதா நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி அன்றைய பாலிவுட்டில் கொண்டாடப்பட்டுள்ளது. அன்றைய சூப்பர் ஸ்டார்களான திலீப்குமார் மற்றும் ராஜ்கபூருடன் ஜோடி சேர்ந்தும் பல ஹிட் படங்களை கொடுத்தார் வஹீதா. 1970களில் நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாகவும், ஒரு சிலபடங்களில் அவரது தாயாகவும் நடித்து பாராட்டுப் பெற்றார்.

சத்யஜித்ரேயின் பெங்காலி திரைப்படமான அபிஜானில், வஹீதா ‘குலாபி’ கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளை பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி என பல மொழிகளில் நடித்தபோதும், பாலிவுட்டில் மட்டுமே அவர் அதிக படங்களில் நடித்துள்ளார்.பாலிவுட்டிலேயே செட்டிலான வஹீதா, 1964ல் வெளியான ஷாகுன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த கமல்ஜீத் என்பவரை காதலித்து, 1974ல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள்.

திருமணத்திற்குப் பிறகு பெங்களூருவில் குடியேறியவர், சுமார் 12 ஆண்டுகள் தனது நடிப்பிற்கு ஓய்வு கொடுத்தார். பின்னர் மீண்டும் திரைத்துறைக்கு 2000ல் திரும்பியவர், வயதான தாய் மற்றும் பாட்டி வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் இந்தியத் திரைத்துறையில் 1969ம் ஆண்டு முதல் ஆண்டு
தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், அசோக்குமார், ராஜ்குமார், திலீப்குமார், சிவாஜி கணேசன், வினோத்கன்னா, இயக்குநர்கள் கே.பாலசந்தர், அடூர் கோபாலகிருஷ்ணன், சத்யஜித்ரே, கே.விஸ்வநாத், பாடகிகள் ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர்.

85 வயது நிறைந்த, ரெட்ரோ பழம்பெரும் நாயகியான வஹீதா ரஹ்மான் தனது சிறந்த நடிப்பிற்காக ஏற்கனவே ஒரு தேசிய விருது, 3 பிலிம் ஃபேர் விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் என அடுக்கடுக்காக பல்வேறு விருதுகளை குவித்தவர். வஹீதாவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை மிகச் சமீபத்தில் மத்திய அரசு வழங்கி கௌரவித்துள்ளது.

மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள வஹீதா, “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மத்திய அரசிடம் இருந்து எனக்கு மிகப் பெரிய விருது கிடைத்துள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு என் நன்றி’’ எனவும் தெரிவித்தார்.தமிழகத்தின் செங்கல்பட்டில் இருந்து கிளம்பி, தெலுங்குத் திரைஉலகத்தில் அறிமுகமாகி, பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த, பாலிவுட் ராணி வஹீதா ரஹ்மானுக்கு, பிரதமர் உட்பட முக்கியத் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post செங்கல்பட்டு to டெல்லி appeared first on Dinakaran.

Related Stories: