சென்னை அம்பத்தூரில் இருந்து நேற்று மாலை 5 மணியளவில் மார்த்தாண்டம் நோக்கி ஒரு தனியார் ஆம்னி பேருந்து கிளம்பியது. இப்பேருந்தில் 33 பேர் பயணம் செய்துள்ளனர். இப்பேருந்தை வைகுண்டம் பகுதியை சேர்ந்த டிரைவர் அருண்குமார் (32) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவருக்கு ஏற்கெனவே உடல்நிலை பாதிப்பு காரணமாக, அவருடன் மாற்று டிரைவராக, சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரை தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகம் உடன் அனுப்பி வைத்துள்ளனர். எனினும், மார்த்தாண்டத்துக்கு உடல்நிலை குறைவோடு டிரைவர் அருண்குமார் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், மார்த்தாண்டம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து இரவு 7 மணியளவில் செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியை பைபாஸ் சாலையை கடக்கும்போது டிரைவர் அருண்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கு சாலையோரத்தில் 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து உருண்டு கவிழ்ந்தது. இதில், பேருந்தில் இருந்த 33 பயணிகளும் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி அலறி கூச்சலிட்டனர். பின்னர் அனைவரும் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு, காயங்களுடன் உயிர் தப்பினர். எனினும், பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி, அருண்குமாருக்கு மாற்று டிரைவராக சென்ற சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் உயிருக்கு போராடினார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மாற்று டிரைவர் மணிகண்டனை மீட்க நீண்ட நேரம் போராடி, இறுதியில் அவரை சடலமாக மீட்டனர். விபத்தில் பலியான மணிகண்டனின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பயணிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவர் அருண்குமார் மற்றும் பயணிகளிடம் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post செங்கல்பட்டு அருகே 15 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்த ஆம்னி பேருந்து: மாற்று டிரைவர் பலி; உயிர் தப்பிய பயணிகள் appeared first on Dinakaran.