நிலவில் பள்ளத்தை முன்கூட்டியே கண்டறிந்து புதிய பாதையில் பயணிக்கும் சந்திரயான் 3 ரோவர்: இஸ்ரோ புதிய அப்டேட்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் 4-மீட்டர் விட்டத்திற்கு பள்ளம் தென்பட்டதால், முன்னதாகவே சுதாரித்து கொண்டு, ரோவர் புதிய பாதையில் பயணத்தை தொடங்கி இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது. அது தனது 41 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, கடந்த 23ம் தேதி விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையில் இறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. உலகில் எந்த நாடும் நிகழ்த்தாத வரலாற்று சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.

இந்நிலையில் நிலவின் தென் துருவத்தில் ரோவர் செல்லும் வழியில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் இருப்பது தெரிய வந்தது. ரோவரால் 5 மீட்டர் தொலைவில் உள்ளவற்றை உணர முடியும் என்ற நிலையில் 3 மீ. தொலைவிலுள்ள பள்ளத்தை உணர்ந்தது. பள்ளம் இருப்பது தெரிய வந்தவுடன் வேறு பாதையில் செல்லுமாறு பிரக்யான் ரோவருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டளை பிறப்பிக்கப்பட்டவுடன் பள்ளத்தை தவிர்த்து சமதள பாதையை கண்டறிந்து நகர்ந்து சென்றதாக இஸ்ரோ தகவல் தெரிவித்தது. லேண்டரில் இருந்து 8-10 மீட்டர் தொலைவில் ரோவர் உள்ளது. மேடான இடங்களை கடக்கும் அளவுக்கு ரோவரின் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

The post நிலவில் பள்ளத்தை முன்கூட்டியே கண்டறிந்து புதிய பாதையில் பயணிக்கும் சந்திரயான் 3 ரோவர்: இஸ்ரோ புதிய அப்டேட் appeared first on Dinakaran.

Related Stories: