மூளையின் முடிச்சுகள் தன்னுயிர் நீத்தல்!

நன்றி குங்குமம் தோழி

முதலில் சினிமாவில் இருந்து தற்கொலை ரீதியாக பார்க்கும் போது, உதாரணத்திற்கு உலக நாயகன் கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், தன் இறந்த காதலியின் உடலை இறுகக் கட்டிக் கொண்டு, ‘‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல” என்ற வரியோடு மலை உச்சியில் இருந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வார். இப்படி ஒரு மனிதன் தன்னுயிரை துறத்தல் என்பது, காலம் காலமாக தியாகத்துக்கும், கவுரவத்துக்கும் உரிய செயலாக நம்மிடம் கடத்தப்படுகிறது.

‘ஆண்டவன் கட்டளை’ படத்தில், நடிகர் விஜய்சேதுபதி ஒரு வீட்டில் குடியிருக்கும்போது, அந்த வீட்டின் ஃபேன் மாட்டும் இடத்தில் அறுபட்ட கயிறு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். தன்னை ஏமாற்றி வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டார் என்று கூறும் போது, உடன் இருக்கும் நண்பர் சொல்லுவார், ‘இங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தற்கொலைகள் இருக்கத்தான் செய்கிறது’ என்று.

கார்ட்டூன் மதன் அவர்கள் எழுதிய ‘மனிதனுக்குள்ளே மிருகம்’ என்ற புத்தகத்தில், ஒரு நாட்டில் ஒரு பாதிரியார் ஒருவரின் பேச்சைக் கேட்டு, ஒரு ஸ்பூன் ஆசிட்டை பல லட்சம் பக்தர்கள் குடித்து இறந்து உள்ளார்கள். இப்படியாக தற்கொலை என்பது தனி மனிதனின் இறப்பு சார்ந்தது இல்லாமல், லட்சக்கணக்கான மனிதர்களின் கூட்டு மரணமாகவும்
தகவல்கள் பதிவாகியுள்ளது.

கடந்த 20 வருடத்திற்கு முன்பு, ஒரு மனிதன் தற்கொலை செய்கிறான் என்றால், வாழ்க்கை மீது வைக்கும் குற்றச்சாட்டும், அதற்கான காரணமும் வலுவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு மாணவர்களில் இருந்து பெரியவர்கள் வரை, தனி மனிதனின் தற்கொலை என்பது, அவர்கள் சொல்லும் வாழ்க்கை மீதும், காரணங்கள் மீதும் புரிந்து கொள்ள முடியாத விஷயமாக, இறந்து போன நபரின் வீட்டில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் புரியாத புதிராய் தற்கொலை மரணங்கள் இருக்கின்றது.

அந்த அளவிற்கு நாம் நம்முடைய எதிர்பார்ப்புகள் மீதுள்ள ஆதிக்கத்தால், கொஞ்சமும் சிந்திக்காமல், வாழ்க்கையை முடித்துக் கொள்ள தயாரான சமூகமாக இன்றைய சமூகம் நிற்கிறது. வாழ்க்கை மீதான பிடிப்பையும் இழந்து, தன் மீதான தனக்குள்ள முக்கியத்துவத்தையும் மறந்து, உறவுகளின் மீதுள்ள தனக்கான இடத்தையும் பறி கொடுக்கவும் தயாராக இருக்கிறது. இவை எல்லாவற்றையும் செய்ய நாம் நம்மை இங்கு அடித்தளமாக நிறுவியிருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு, நாம் நிறைய நாட்கள் காத்திருக்க வேண்டும். அந்த காத்திருப்பும், பொறுமையும் இன்ஸ்டென்ட் உலகில் குறைந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. அதனால்தான் இன்றைக்கு தற்கொலை என்பது பொது சுகாதாரத் துறைக்கும், சமூக கட்டமைப்பிற்கும் பெரிய சவாலாக இருக்கின்றது.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலையால் இறக்கின்றனர். ஒவ்வொரு மனிதனின் தற்கொலைக்கு காரணமாக சமூக அழுத்தம், தனிமனித உணர்ச்சி மற்றும் பொருளாதாரம் சார்ந்த விளைவுகளைக் கொண்டிருக்கிறது. மேலும் உலகெங்கிலும் தற்கொலை செய்தி வெளியிடப்படும்போது, தனிநபர்கள் மற்றும் சமுதாயத்தை அது ஆழமாகப் பாதிக்கிறது.

இதனால்தான், 2003ல் உலக சுகாதார அமைப்புடன் (WHO) இணைந்து உலக தற்கொலை தடுப்பு தினம்(WSPD) சர்வதேச சங்கத்தால் நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகின்றது. இந்த அமைப்பின் ஒட்டுமொத்த நோக்கம், தற்கொலையைத் தடுப்பதற்கான வழிகள் மற்றும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாகும்.
இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நபரும் தற்கொலை எண்ணம் தோன்றும் சக மனிதனின் எண்ணத்தை மாற்றி உயிர் வாழவைக்கும் முயற்சியை எடுக்க துணையாக இருக்க வேண்டும். அதை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.

இந்த ஆண்டு உலக தற்கொலைத் தடுப்பு தினத்திற்கான கருப்பொருளாக ‘தற்கொலை பற்றிய கதையை மாற்றுதல் என்பதும், ஒருவர் தற்கொலை எண்ணத்தில் இருக்கும் போது, அதற்கான ‘உரையாடலைத் தொடங்கு’ என்ற செயலுக்கான அழைப்பை பற்றியும், இதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தற்கொலையைத் தடுக்க திறந்த உரையாடல்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு உரையாடலும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், சக மனிதனுக்கு ஆதரவாகவும் மற்றும் புரிந்துகொள்ளும் விதத்திலும் இருக்கும்போது, அந்த கருத்து சமூகத்திற்கும், அந்த தனி நபரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய அளவில் பங்களிக்கிறது. இந்த முக்கியமான உரையாடல்களைத் தொடங்குவதன் மூலம், நாம் நமக்குள் தோன்றும் எண்ணத் தடைகளை உடைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

அதுவும் சோசியல் மீடியாவில் குழுவாக ஒரு தனிநபரை தாக்கும்போது, படித்தவர்கள், ஆளுமைமிக்க நபர்கள், துறை சார்ந்த நிபுணர்கள், சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் என்கிற பிம்பத்துடன் இருப்பவர்கள்தான், அவதூறுகளை பேசுவதில் துளி கூட அக்கறை இன்றி செயல்படுகிறார்கள். இன்றைக்கு தற்கொலை எண்ணம் வராத நபர்கள் யாருமில்லை என்கிற அளவிற்கு சமூக அழுத்தங்கள் நிறைந்திருக்கிறது. ஒரு தனி நபர் தனக்கு தற்கொலை எண்ணம் வருகிறது என்று கூறினாலே, அவருடன் மனம் திறந்த உரையாடலை துவங்க வேண்டும் என்பதே அதிமுக்கியத் தேவையாக இன்றைக்கு இருக்கிறது.

தற்கொலை எண்ணத்தை தடுப்பது மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிப்பதன் அவசியத்தையும் இதன் மூலம் வலியுறுத்துகிறது.தனி மனிதனின் மனஆரோக்கியத்தில் முன்னுரிமை வழங்கவும், தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் மீது கவனிப்பை அதிகரித்து, தேவைப்படும் நபருக்கு ஆதரவை வழங்குகிற கொள்கைகளை அரசு பரிந்துரைக்க வேண்டும்.

தொகுப்பு: காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

 

The post மூளையின் முடிச்சுகள் தன்னுயிர் நீத்தல்! appeared first on Dinakaran.

Related Stories: