மத்திய வெடிபொருள் நிபுணர் குழு ஆய்வு

 

கிருஷ்ணகிரி, ஜூலை 31: கிருஷ்ணகிரியில், பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்திய மத்திய வெடிபொருள் நிபுணர் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் இயங்கி வந்த பட்டாசு குடோனில், நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட வெடி விபத்தில், 6 கடைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் ஒரு வெல்டிங் கடை, மற்றொரு மரக்கடை, இறைச்சிக் கடை, ஒரு வீடு, குடிநீர் தயாரிக்கும் குடோன் ஆகியவை இடிந்து சேதமானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தை, மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாடு துறை சார்பில், வேலூர் மண்டல வெடிபொருள் நிபுணர் கணேஷ் தலைமையில் 2 அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளின் உரிமையாளர் மரியபாக்கியத்தின் மகன் அந்தோணியிடம், அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், எத்தனை கடைகள் இருந்தன, எத்தனை ஆண்டுகளாக பட்டாசு தயாரிக்கிறார்கள். எங்கெல்லாம் பட்டாசு விற்பனைக்கு அனுப்பப்பட்டது, ஓட்டல் எங்கு இருந்தது என விசாரித்தனர். மேலும் இடிந்த கட்டிடத்தில் இருந்த பெரிய குழாய் போன்ற வெடிக்காத பட்டாசு, லட்சுமி வெடி, சணல், திரி, மருந்து நிரப்பும் கட்டைகள், வெடி விபத்தில் தரைமட்டமான பட்டாசு கடையில் இருந்த மண் ஆகியவற்றை சேகரித்துச் சென்றனர். சேகரித்த பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் அறிக்கையை மத்திய, மாநில அரசுக்கு வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். ஆய்வின் போது, கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், தாசில்தார் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்

The post மத்திய வெடிபொருள் நிபுணர் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: