சென்னை சென்ட்ரல் பகுதியை ஒரு உலகத்தரம் வாய்ந்த அடையாளமாக மேம்படுத்தும் நோக்கில், மத்திய சதுக்கத் திட்ட கட்டுமானப் பணிகளை சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் 50:50 என்கிற சமவீத பங்களிப்புடன், கூட்டு முயற்சி அடிப்படையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டுமான பணிகளை செயல்படுத்தவுள்ளது.
சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டிடம் 14,280 சதுர மீட்டர் நிலப்பரப்பளவில், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள 4 அடித்தளங்களுடன், தற்போது கட்டப்படவுள்ள தரைத்தளம் மற்றும் 27 அடுக்குமாடிகளுடன் (120 மீட்டர் உயரம்) அமைக்கப்படவுள்ளது. தரைதளம் முதல் 4 தளங்கள் வரை சில்லரை மற்றும் வணிக பயன்பாட்டிற்காகவும், 5 முதல் 24 தளங்கள் வரை அலுவலகங்களுக்கான பயன்பாட்டிற்கும், 25வது தளம் சேவைகளுக்காகவும், 26 மற்றும் 27வது தளங்கள் வணிக நோக்கத்திற்காகவும் கட்டமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.
The post சென்ட்ரல் சதுக்கத்தில் தரைத்தளம் மற்றும் 27 அடுக்குமாடியுடன் ரூ.350 கோடியில் சென்ட்ரல் கோபுர கட்டிடம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.