சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு எச்சரிக்கை

தண்டையார்பேட்டை: சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீசார் எச்சரித்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வடமாநிலத்திற்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுபோல் கேரளா, கோயம்புத்தூர் மற்றும் தென்மாவட்டங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்மநபர் ஒருவர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.

அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பூக்கடை காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார், தொலைபேசியில் சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண்ணை சோதனை செய்து விசாரித்தனர்.

அது, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், வியாசர்பாடி மல்லிப்பூ காலனியை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன் (21) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. நேற்றிரவு மணிகண்டனை பார்த்து கொள்வதற்காக தந்தை ராமலிங்கம் உடனிருந்துள்ளார். அவர் தூங்கிய நேரத்தில் செல்போனை எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மணிகண்டன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை‌ எச்சரித்தனர். இதுபோல் இவர் 2 முறை வெடிகுண்டு வைத்திருப்பதாக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனிடையே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில், பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான், பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு, ஆய்வாளர் தளவாய்சாமி, சென்ட்ரல் ரயில்வே துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார், ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் என 50க்கும் மேற்பட்டோர் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை, புரளி என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

The post சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: