×

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை: ரூ.50 லட்சம் அபராதம்; சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 75 லட்சம் சொத்துச் சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2011ல் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து 2016ல் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடி தரப்பில், ‘‘மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

தனியாக வணிகமும் செய்வதால், அதன் மூலமும் வருமானம் கிடைக்கிறது. இவற்றை எல்லாம் புலன் விசாரணை அதிகாரி கணக்கில் எடுக்கவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்று வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த வருமானக் கணக்குகளின் அடிப்படையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிபதி அளித்த தீர்ப்பு ஏற்க கூடியதாக இல்லை.

வருமான வரித்துறைக்கு கணக்கை தாக்கல் செய்துள்ளார் என்பதற்காக விடுதலை செய்ய முடியாது. பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதம் சொத்துக்களை சேர்த்தது நிரூபணமாகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கருத்தில் கொள்ளாமல் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், பொன்முடி, அவரது மனைவியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து டிசம்பர் 21ம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 19ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேற்று காலை 9.50 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் தண்டனை விபரத்தை அறிவிப்பதற்காக நீதிபதி காலை 10.40 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்தார். அவர்களிடம், உங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை குறித்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று நீதிபதி கேட்டார். அதற்கு பொன்முடி நான் நிரபராதி. எனக்கு 73 வயது ஆகிறது. இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். கீழமை நீதிமன்றம் போதிய சாட்சிகள் இல்லாததால் என்னை நிரபராதி என்று விடுதலை செய்தது.

எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றார். பொன்முடியின் மனைவி நீதிபதியிடம், எனக்கு 68 வயதாகிறது. மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு உள்ளேன். கீழமை நீதிமன்றம் என்னை நிரபராதி என்று விடுதலை செய்தது. எனவே, குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டுகிறேன் என்றார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வயது காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டின் தன்மை மற்றும் குற்றவாளிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.பொன்முடி தற்போது உயர் கல்வி துறை அமைச்சராக உள்ளதாலும் அவரது உடல் நிலையை கருத்தில்கொண்டும் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இருவரும் விசாரணை நீதிமன்றத்தில் ஜனவரி 22ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அப்போது, இருவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, பொன்முடி உயர்கல்வி துறை அமைச்சர். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை 60 நாட்கள் நிறுத்திவைக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதி, அவர் அமைச்சர் என்பதால் மேல்முறையீட்டுக்காக 30 நாட்கள் தண்டனை நிறுத்திவைக்கப்படுகிறது. அதற்குள் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் இருவரும் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டார். தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் பொன்முடி மற்றும் அவரது மனைவி நீதிமன்றம் அருகே சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். பின்னர் அவர்கள் தீர்ப்பு நகலில் கையெழுத்திட்டுவிட்டு காரில் அங்கிருந்து புறப்பட்டனர்.

* மனைவி கண் கலங்கினார்
தண்டனை விபரம் வாசிக்கப்பட்டவுடன் அமைச்சர் பொன்முடியின் மனைவி கண்கலங்கினார். அவரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் சமாதானம் செய்தனர்.

* தகுதி இழப்பு
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 (1) (எம்)ல் ஊழல் வழக்கில் ஒருவரை நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்த உடனே அவர் எம்.பி அல்லது எம்எல்ஏ பதவியை வகிக்கும் தகுதியை இழந்துவிடுவார். நீதிமன்றமோ, சபாநாயகரோ எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தவுடன் சபாநாயகர் சம்மந்தப்பட்ட தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியிடுவார்.

* சொத்துக்களை முடக்கியவர்
தண்டனை விபரம் அறிவித்தவுடன் பொன்முடி தரப்பு வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ நீதிபதியிடம், இந்த வழக்கில் கடந்த 2013ல் சொத்துக்கள் முடக்கப்பட்டன. சொத்துக்களை முடக்கம் செய்து உத்தரவிட்டதே நீங்கள் தான். இந்த விபரம் இப்போதுதான் தெரிய வந்தது. அதனால் இந்த விஷயத்தை விசாரணையின்போது தெரிவிக்க முடியவில்லை என்றார். அதற்கு நீதிபதி, அது விசாரணை நீதிமன்ற நடைமுறை. இது உயர் நீதிமன்றம். நீங்கள் மேல் முறையீடு செய்யலாம் என்றார்.

* மேல்முறையீடு எப்போது?
உச்ச நீதிமன்றத்தில் தற்போது விடுமுறை என்பதால் விடுமுறை கால நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய முடியும். அல்லது ஜனவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றம் திறந்தவுடன் மேல் முறையீடு செய்யலாம். மேல் முறையீட்டில் தண்டனையை நிறுத்தி வைக்கவோ, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை உத்தரவோ பெறலாம்.

* 5 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்ற பொன்முடி
பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் டி.எடையார் கிராமத்தில் 1950ல் பிறந்தார். வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலை பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்ற பொன்முடி, பேராசிரியராக பணியாற்றியுள்ளார். 1989ம் ஆண்டு முதல் திமுகவில் படிப்படியாக வளர்ந்து விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்தார். தற்போது திமுக துணை பொதுச்செயலாளராகவும் உள்ளார். 1989ம் ஆண்டு விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு விழுப்புரத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1996ம் ஆண்டு, 2001ம் ஆண்டுகளில் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு விழுப்புரத்தில் தோல்வி அடைந்தார்.

2016ம் ஆண்டு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் திருக்கோவிலூர் தொகுதியில் வெற்றி பெற்று, திமுக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சரானார். முன்னதாக 1996ம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சராகவும், 2006ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 2021ம் ஆண்டு திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடி 1,10,980 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜ வேட்பாளர் கலிவரதன் 51,300 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 59 ஆயிரத்து 680 வாக்குகள் அதிகம் பெற்று பொன்முடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

* 3 ஆண்டு தண்டனை அறிவித்ததை தொடர்ந்து அமைச்சர், எம்எல்ஏ பதவி இழந்தார் பொன்முடி
அமைச்சர் பொன்முடிக்கு தண்டணை அறிவித்து, தீர்ப்பு வெளியான நிலையில், அவர் அமைச்சர், எம்எல்ஏ பதவியில் நீடிக்க முடியாது. உயர் நீதிமன்றம் தண்டனை விவரங்களை வெளியிட்டதை தொடர்ந்து, அந்த உத்தரவு குறித்த முழு விவரம் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதில் கூறப்பட்டுள்ளபடி, எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான அறிவிப்பாணையை சட்டப்பேரவை செயலகம் வெளியிடும். இந்த அறிவிப்பாணை, தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்படும். அதன் பிறகே தகுதி இழப்பு, அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.

அதன் பின்னர், பொன்முடி போட்டியிட்டு வெற்றிபெற்ற திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என்று, இந்திய தேர்தல் கமிஷனுக்கு சட்டப்பேரவை செயலகம் கருத்துருவை அனுப்பி வைக்கும். அதை ஏற்றுக் கொண்டு அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலை 6 மாதங்களுக்குள் தேர்தல் கமிஷன் நடத்தும். இதற்கு முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்தார். அதேபோன்று, கலவர வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி இருப்பதால் பொன்முடி, தனது எம்எல்ஏ பதவியை இழந்து விட்டார். இதையொட்டி பொன்முடி தனது அமைச்சர் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடிக்கு நீதிமன்றம் அறிவித்த 3 ஆண்டு தண்டனை மற்றும் மேலும் 6 ஆண்டு என 9 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அதேநேரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்கி, தனது பதவியை காப்பாற்றவும் பொன்முடி தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

The post சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை: ரூ.50 லட்சம் அபராதம்; சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Chennai High Court ,Chennai ,Dinakaran ,
× RELATED நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப்...