அதிமுக ஆட்சியில் முறைகேடாக 50 சமையலர் நியமனம் துணை கலெக்டர், தாசில்தார் உள்பட 16 பேர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நல விடுதிக்கு முறைகேடாக 50 சமையலரை நியமித்ததில் துணை கலெக்டர் உள்பட 16 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகம் சார்பில் கடந்த 2015ல், அதிமுக ஆட்சியின்போது ஆதிதிராவிடர் நல விடுதிக்கு 80 சமையலர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு முறைகேடாக கூடுதலாக 50 சமையலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியிடங்கள் வழங்கப்பட்டன.

கூடுதலாக தேர்வு செய்யப்பட்ட 50 சமையலர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டது. முறைகேடாக தேர்வு செய்யப்பட்ட சமையலர்களுக்கு ஊதியம் அளித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கூடுதலாக 50 பேரை முறைகேடாக நியமித்து அரசு ஊதியம் வழங்கி வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதைதொடர்ந்து, அப்போதைய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலரான துணை கலெக்டர் சுந்தரம் (தற்போது செங்கல்பட்டில் பணியாற்றி வருகிறார்), முன்னாள் பழங்குடியின தலைமை ஆசிரியர் மணிமொழி, முன்னாள் ஓமலூர் ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் தங்கவேல், ஆத்தூர் முன்னாள் ஆதி திராவிடர் தனி தாசில்தார் மணி உள்பட 16 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அதிமுக ஆட்சியில் முறைகேடாக 50 சமையலர் நியமனம் துணை கலெக்டர், தாசில்தார் உள்பட 16 பேர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: