என்எல்சி நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்

சென்னை: என்.எல்.சி. நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பிரதமர் அறிவித்த ரோஸ்கார் மேளா திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை கோரி என்.எல்.சி. நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; என்.எல்.சி. நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கண்டறியும்படி கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டார். தொழிற்சங்கம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்; கடந்த 8 நாட்கள் களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம் என கூறினார். சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க இயலாது என கூறிய நீதிபதி; காவல்துறை குறிப்பிடும் இடங்களில் அமைதியாக போராட்டம் நடத்திக் கொள்ளலாம்.

நீதிமன்ற உத்தரவை மீறி சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினால் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம். என்.எல்.சி., ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி ஆக.8-ல் விவாதிக்கலாம். பிரச்சனைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிப்பது பற்றி ஆக.8-ல் விவாதிக்கலாம் என உத்தரவிட்டார்.

The post என்எல்சி நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: