நாட்டில் முதல்முறையாக தமிழ்நாடு முழுவதும் 31,000 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்: திருக்குவளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 17 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுகின்றனர்

நாகை: நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாடு முழுவதும் 31,000 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். பள்ளிக் குழந்தைகள் பலரும் காலையில் சாப்பிடுவதில்லை என்பதை கேள்விப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் உணவளிக்கும் திட்டத்தை தொடங்க முடிவு செய்தார். கல்வி கற்பதற்குப் பசி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பது இதன் முக்கிய நோக்கமாகும். இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இற்கான ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றிவிட்டு உரையாற்றும்போது, ‘வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும். திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பயின்ற திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைக்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது’ என்ற அறிவித்தார். அதன்படி, கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் நேற்று காலை முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தும் விழா நடந்தது.

விழா குறித்து விளக்கும் வகையில் காலை உணவு திட்டம் பற்றிய குறும்படம் வெளியிடப்பட்டது. சுமார் 10 நிமிடம் ஓடிய குறும்படத்தில் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது, மாணவ, மாணவிகள் சாப்பிடுவது, முதல்வர் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. சரியாக காலை 8 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கு வந்தார். அவரை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வரவேற்றார். பின்னர் மாணவ, மாணவிகள் முதல்வருக்கு வரவேற்பு அளித்து பள்ளிக்குள் அழைத்து வந்தனர். பள்ளிக்குள் நுழைந்ததும் முதல்வர் நேராக சமையல் கூடத்துக்கு சென்று பாத்திரங்களில் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை பார்வையிட்டார். பின்னர் சாப்பிடுவதற்காக இரண்டு வரிசைகளில் அமர வைக்கப்பட்டிருந்த 25 மாணவ, மாணவிகளுக்கு ரவா கிச்சடி, சாம்பார், சர்க்கரை பொங்கலை முதல்வரே பரிமாறினார்.

பின்னர் அவர்களுடன் அமர்ந்து முதல்வர் உணவருந்தினார். இதையடுத்து இதே பள்ளியில் மற்ற அறைகளில் மாணவ, மாணவிகள் உணவருந்தியதையும் முதல்வர் பார்வையிட்டார். இந்த பள்ளியில் மொத்தம் 169 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் படித்த தொடக்க பள்ளியில் இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை விரிவாக்கம் செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். 1921ல் நீதிக்கட்சி ஆட்சித் தொடங்கி, 2021 வரைக்கும் இருந்ததெல்லாம் மதிய உணவுத் திட்டங்கள்தான். இந்த நிலையில்தான், சென்னை அசோக் நகரில் இருக்கக்கூடிய பெண்கள் மேனிலை பள்ளிக்கு ஒரு விழாவிற்காக நான் சென்றேன். அங்கு படிக்கின்ற மாணவியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது காலையில் என்ன சாப்பிட்டீங்க? என்று கேட்டேன்.

பெரும்பாலானவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் நாங்கள் சாப்பிடவில்ல என்று சொன்னார்கள்.இதையெல்லாம் மனதில் வைத்துதான் இந்த காலை உணவு திட்டம் உருவாக்கவேண்டும் என்று நான் அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். அதிகாரிகள் நிதிச்சுமை போன்ற காரணங்களை எல்லாம் சொன்னார்கள். இதைவிட வேறு எதும் முக்கியமாக இருக்க முடியாது என்று கட்டாயப்படுத்தி நான்தான் இந்த திட்டத்தை விரைவாக நடத்தவேண்டும் என்று சொன்னேன். நம்முடைய எதிர்கால நம்பிக்கைகளான பள்ளிக் குழந்தைகளுக்கான திட்டத்திற்குரிய தொகையை, நிதி ஒதுக்கீடு என்று சொல்வதைவிட நிதி முதலீடு என்றே நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், மாணவர்களின் அறிவை மேம்படுத்த, உள்ளத்தை மேம்படுத்த அரசு நிதி முதலீடு செய்திருக்கிறது.

அந்த முதலீடு நிச்சயமாக நாட்டுக்கு லாபம் தரும் வகையிலான ஆற்றலாக, திறமையாக வெளிப்படும். அதுதான் உண்மை. பசிப்பிணி நீங்கிட்டால், மனநிறைவோடு பிள்ளைகள் படிப்பார்கள். அவர்கள் மனதில் பாடங்கள் பதியும். பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவார்கள். சீரான வருகை பதிவும் இருக்கும். தமிழ்நாட்டின் கல்வி விகிதமும் அதிகம் ஆகும். தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் அறிவாற்றல் பொருந்தியவர்களாக உயர்வார்கள். படிப்புடன் விளையாட்டு, கலைத்திறன் ஆகியவற்றிலும் சாதனை படைக்க கூடியவர்களாக நிச்சயம் திகழ்வார்கள். இப்படி எத்தனையோ நன்மைகளை நம்முடைய மாநிலம் இந்த திட்டத்தால் அடைய போகிறது. எதிர்கால தமிழ் சமூகம் பயனடைய போகிறது. அன்புள்ள மாணவ செல்வங்களே, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் வைக்கின்ற வேண்டுகோள் இது. உங்களுக்கு காலையும், மதியமும் உணவு வழங்குகிறோம்.

எனவே, நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிங்க, படிங்க, இது ஒன்றுதான் என்னுடைய வேண்டுகோள். படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து. அத்தகைய சொத்தை உங்களுக்கு நீங்களே சேர்த்து கொள்ளுங்கள். உங்களது மற்ற கவலைகள், மற்ற தேவைகளை நிறைவு செய்ய நமது அரசு இருக்கிறது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான் இருக்கிறேன். நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். படிப்பு உங்களை உயர்த்தும்.

நிலாவுக்கு சென்று ஆய்வு செய்யும் விண்கலம் அனுப்பி சாதனை படைதிருக்கின்ற தமிழ்நாட்டு அறிவியலாளர்கள் போல, இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், உலகம் அண்ணாந்து பார்க்கின்ற வகையிலான சாதனையாளராக நீங்கள் மாறவேண்டும், உயரவேண்டும். அதனை உங்கள் பெற்றோரோடு சேர்ந்து நானும் காண வேண்டும். பெருமைப்பட வேண்டும் என்று கேட்டு, அதை நீங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள், நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

* காலை உணவுத்திட்டத்தின் 5 நோக்கங்கள்

* மாணவர்கள் பசியில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும்.

* ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் அந்த குழந்தைகள் இருக்க வேண்டும்.

* இரத்த சோகை என்ற குறைபாட்டை நீக்கவேண்டும்.

* மாணவர்களுடைய வருகை பதிவை அதிகரிக்க வேண்டும்.

* வேலைக்கு செல்கின்ற தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். இந்த 5 நோக்கத்தை படிப்படியாக நிறைவேற்றவேண்டும் என்பதுதான் நம்முடைய லட்சியம். முழுமையாக அடைந்தே தீருவோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

*‘பசிப்பிணி என்பதையே மாணவர்கள் அறியக்கூடாது’
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: திருக்குவளையின் இன்றைய காலை, வரலாற்றின் புதிய தொடக்கம். நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி 2021 வரை மதிய உணவு திட்டங்களே இருந்தன. நூறாண்டுகள் கடந்து காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளோம். இந்த முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கம் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பசியாற்றவுள்ளது. எனது அழைப்பை ஏற்று, தங்களது பகுதிகளில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றி. பசிப்பிணி என்பதையே மாணவச் செல்வங்கள் அறியக்கூடாது. அறிவுப்பசி ஒன்றே அவர்களுக்கு வேண்டும் என்று கூறியுள்ளார்.

*திராவிடவியல் கோட்பாடு கோலோச்சும் காலம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘அந்த காலத்தில் அரசர் குலத்தவர் மட்டுமே கற்றுகொள்ளலாம் என்று இருந்த, வில் வித்தையை வேடர் குலத்தை சேர்ந்த ஏகலைவன் கற்றுக்கொண்டதை பார்த்து கட்டைவிரலை காணிக்கையாக கேட்கின்ற துரோணாச்சாரியார் போன்ற ஆசிரியர்கள்தான் இருந்தார்கள். சமூகநீதி நிலைநாட்டப்படும் இந்த காலத்தில் யாராவது கட்டை விரலை காணிக்கையாக கேட்டால் அவர்களுடைய பட்டை உரியும் என்று எச்சரித்தவர் இந்த மண்ணின் மைந்தர் நம்முடைய தலைவர் கலைஞர். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வகுத்த சமூக நீதிப்பாதையில் அனைத்து அறிவையும் அனைத்து சமூகத்தவருக்கும் தருகின்ற ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம்.

இந்த சூழலிலும் தேசிய கல்விக்கொள்கை என்கின்ற பெயரில், நீட்என்ற பெயரில் தடுப்புசுவர் போடுகின்ற `துரோக ஆச்சாரியார்களும்’ இருக்கத்தான் செய்கிறார்கள். ஏகலைவன் தன்னுடைய கட்டை விரலை காணிக்கை கொடுத்ததெல்லாம் அந்த காலம். அந்த காலம் மலை ஏறிவிட்டது. இது கலைஞர் உருவாக்கி தந்திருக்கக்கூடிய காலம். இது துரோணாச்சாரியார்களின் காலம் கிடையாது. ஏகலைவன்களின் காலம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் என்ற திராவிடவியல் கோட்பாடு கோலோச்சும் காலம்’ என்றார்.

*62 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்தில் முன்னேற்றம்
கடந்த ஓராண்டில் 10 லட்சம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில், 92 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாக கண்டறியப்பட்டு அந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சிறப்பு உணவு பொருட்கள் கொடுத்ததால் 62 ஆயிரம் குழந்தைகள் தங்களது ஊட்டச்சத்து நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள். அதில், சில குழந்தைகளை என்னை பார்ப்பதற்காக கோட்டைக்கு அழைத்து வந்தார்கள். நேரில் பார்த்தேன். அந்த குழந்தைகளுடைய வளர்ச்சியில்தான் நம்முடைய அரசாங்கத்தின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

*மாணவர்களிடம் முதல்வரின் பரிவு, நகைச்சுவை ஊட்டி விடவா!
முதல்வருக்கு இடதுபுறம் அமர்ந்து சாப்பிட்ட 3ம் வகுப்பு மாணவி சுதர்சனாவிடம், உன் பெயர் என்ன, அப்பா, அம்மா பெயர்கள் என்ன, அப்பா என்ன வேலை பார்க்கிறார். காலை உணவு சாப்பிட்டு விட்டு வந்தியா, எந்த ஊரிலிருந்து வருகிறாய், என்ன படிக்கிறாய், நல்லா படிப்பியா என சாப்பிட்டுக்கொண்டே முதல்வர் கேள்விகள் கேட்டார். இதற்கு அந்த மாணவி பொறுமையாக பதில் அளித்தார். மேலும் ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய் ஊட்டி விடவா என அன்புடன் முதல்வர் கேட்டார். பின்னர் மாணவி சுதர்சனா சாப்பிடத் தொடங்கினார்.

* நான் யார் தெரியுமா?
முதல்வர் தனது வலதுபுறம் அமர்ந்து சாப்பிட்ட 1ம் வகுப்பு மாணவன் ஹரிஷிடம், நான் யார் தெரியுமா? என முதல்வர் நகைச்சுவையுடன் கேட்டார். அதற்கு மாணவன் சி.எம் என பதிலளித்தான். இதைக்கேட்டு சிரித்துக்கொண்ட முதல்வர், அது எனது பதவி, எனது பெயர் என்ன என மீண்டும் கேட்டார். அதற்கும் மாணவன் சி.எம். என்றதால் முதல்வர் சிரித்தபடி மாணவனிடம் அடுத்ததாக எங்க அப்பாவை தெரியுமா என்றார். இதற்கு மாணவன் பதில் சொல்லவில்லை. பின்னர் மாணவனின் வாட்சை பார்த்து மணி எத்தனை என கேட்டார். மாணவன் வாட்ச் ஓடவில்லை என கூறினான். பின்னர் தனது வாட்சை காட்டி மணி எத்தனை பார்த்து சொல் என்று முதல்வர் கேட்டார். ஆனால் மாணவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

* குறைகள் இருந்தா சொல்லுங்க….
மாணவி மோன்சிகா கூறுகையில், ‘திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறேன். நான் படிக்கும் பள்ளிக்கு வந்த முதல்வர் அய்யா அவர்கள் காலை உணவு வழங்கினார். அவர் வழங்கிய உணவு நன்றாக இருந்தது. முதல்வர் அய்யா உணவு பரிமாறும் போது எங்களிடம் வேறு ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவிக்கவும் என்று கூறினார். காலை உணவு சாப்பிட்ட பின்னர் உணவு சுவையாக இருந்ததா என்று கேட்டார். காலையில் முதல்வர் அய்யா உப்புமா, பொங்கல், சாம்பார் ஆகியவை கொடுத்தார். முதல்வர் அய்யா எங்களை தேடி வந்து காலை உணவு வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

The post நாட்டில் முதல்முறையாக தமிழ்நாடு முழுவதும் 31,000 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்: திருக்குவளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 17 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: