விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்: சென்னைக்கு பறந்து வந்த இருதயம், நுரையீரல்கள்

மதுரை: கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தேனி மாவட்டம், கம்பம், பாரதியார் நகர் வடக்கு தெருவைச் சேர்ந்த மணிவாசகம் மகன் பரத்குமார்(19). இவர், வீரபாண்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி மாலை கல்லூரி முடிந்து பரத்குமார், டூவிலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அனுமந்தம்பட்டி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு டூவீலர், பரத்குமார் டூவீலர் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரத்குமார், தேனி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு பரத்குமார் முளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மணிவாசகம், தனது மகன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். இதைதொடர்ந்து பரத்குமாரின் இருதயம், சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கும், இரு நுரையீரல்கள் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் நேற்று தானமாக அளிக்கப்பட்டது. இதில் இருதயம், நுரையீரல் ஆகியவை விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. பின்னர், மாணவரின் உடலுக்கு மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் மரியாதை செய்து, அரசு மரியாதையுடன் கம்பம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

The post விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்: சென்னைக்கு பறந்து வந்த இருதயம், நுரையீரல்கள் appeared first on Dinakaran.

Related Stories: