பயணத்தில் பிறந்த மோமோஸ்!

இன்று உலகம் முழுவதும் அறியப்படுகிற உணவாக மோமாஸ் பிரபலம் அடைந்திருக்கிறது. நம்மூர் கொழுக்கட்டை ஸ்டைலில் இருக்கும் இந்த உணவுக்கு சில வரலாற்றுக் கதைகளும் இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளமும், திபெத்தும் மோமோஸின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. 14ம் நூற்றாண்டில் நேபாள நாட்டில் உள்ள நெவார் இனத்தை சேர்ந்தவர்கள், திபெத் நாட்டில் வணிகம் செய்திருக்கிறார்கள். வணிகத்திற்காக திபெத்துக்கு அதிகளவில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பயணங்களின்போது, வழியில் சமைத்து சாப்பிட ஏதாவது செய்யணுமே என யோசித்திருக்கிறார்கள். அந்த உணவு எடுத்துச்செல்ல எளிதாக இருக்க வேண்டும், தயாரிக்கும் முறையும் எளிதாக இருக்க வேண்டும் என நினைத்திருக்கிறார்கள்.

அப்போது சப்பாத்திக்காக பிசையப்பட்ட கோதுமை மாவினுள் நறுக்கிய காய்கறிகளை வைத்து பொட்டலங்கள் போன்று செய்து சமைத்து சாப்பிடும் செய்முறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுவே, பின்னாளில் மோமோஸாக மாறியிருக்கிறது. அதேசமயம், 1960களில் ஏராளமான திபெத்தியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது மோமோஸ் இந்தியாவிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே மோமோஸ், நேபாளம் மற்றும் திபெத் இரண்டுக்குமே உரிமையானதாக நம்பப்படுகிறது. மோமோஸ் தமிழகத்தின் கொழுக்கட்டையை ஒத்த சாயல் கொண்ட ஒருஉணவாகவும் இருக்கிறது.நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள நெவார் சமூகத்தினரிடையே இந்த உணவு ஆரம்பத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. அதுவே, திபெத் மக்கள் கொஞ்சம் மாறுபட்டு மோமோஸின் உள்ளே வைக்கும் பூரணம் காய்கறிகளில் இல்லாமல், யாக் எனும் மாட்டிறைச்சி, உருளைக்கிழங்கு, பனீர் போன்றவற்றில் ஒன்றை நிரப்பி தயாரித்திருக்கிறார்கள்.

நேபாளத்தின் மோமோஸ், அமைப்பு, சுவை ஆகிய இரண்டிலும் தனித்துவம் கொண்டது. அதைப் பின்பற்றியே இந்தியாவின் பல பகுதிகளிலும் செய்து வந்தனர். பின்னர் இது இந்தியாவில் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்றாக மாறத்தொடங்கியது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் போன்ற இடங்களில் புதுப்புது மாற்றங்களோடு பல மோமோஸ் வகைகள் உருவாகின. இருப்பினும்,இந்தியாவின் கங்கைச் சமவெளிக்கு வந்தபோது, சைவ இந்துக்களில் பெரும்பான்மையினருக்கு உணவளிக்க மோமோஸ் சைவமாக மாற்றப்பட்டது. ஆனாலும் ஒரு தரப்பு மக்கள் சிக்கன் உள்ளிட்ட அசைவ மோமோஸை கைவிடவில்லை. பின்பு அருகில் உள்ள நாடுகளுக்கு எல்லாம் பரவி அந்தந்த நாட்டின் தனிச் சுவைகளையும் தனக்குள் கொண்டு, பல சுவைகளில் அவதாரங்களை எடுத்தது மோமோஸ். இப்போது எல்லை தாண்டி பல நாடுகளுக்கும் பரவி உலக மக்களின் பிடித்தமான உணவுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

– ஸ்ரீ

The post பயணத்தில் பிறந்த மோமோஸ்! appeared first on Dinakaran.

Related Stories: