பாஜ ஆட்சியில் ஜனநாயகம் மெல்ல மெல்ல சாகிறது முத்தரசன் தாக்கு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று மாலை அளித்த பேட்டி பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் ஒட்டுமொத்த ஜனநாயகமும் மெல்ல மெல்ல செத்து வருகிறது. அந்த ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றிட வேண்டும்.

இந்தியா கூட்டணி உருவான பிறகு பாஜக வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் தோற்கும் என்ற நிலை உள்ளது. இதனால் தான் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பாஜ மேற்கொண்டு வருகிறது. அமலாக்கத்துறை, வருமானத்துறையை தவறான முறையில் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை வஞ்சித்து வருகிறது.

பாஜகவினர் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, அனைவரது வங்கி கணக்கில் 15 லட்சம் வரவு வைக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் தோல்வியடைந்தது.

தங்களின் தோல்விகளை மறைப்பதற்காகவே மணிப்பூர், அரியானா மாநிலங்களில் கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயங்களை தேடலாம் என்ற குறுகிய நோக்கத்துடன் பாஜகவினர் செயல்படுகின்றனர். நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கிறார். இதைவிட ஜனநாயக சீர்கேடு எதுவும் இல்லை. வரும் 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்.

The post பாஜ ஆட்சியில் ஜனநாயகம் மெல்ல மெல்ல சாகிறது முத்தரசன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: