×

பீகார் முதல்வரின் கிராமத்திற்கு செல்ல முயன்ற பிரசாந்த் கிஷோர் தடுத்து நிறுத்தம்: போலீசாருடன் வாக்குவாதம்

பாட்னா: பீகார் முதல்வரின் கிராமத்திற்கு செல்ல முயன்ற பிரசாந்த் கிஷோர் தடுத்து நிறுத்தத்தப்பட்ட நிலையில், அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரபல அரசியல் வியூகவாதியான, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த கிராமமான நாலந்தா மாவட்டத்திலுள்ள கல்யாண் பிகாவிற்கு சென்று தனது கட்சியின் ‘கையெழுத்து பிரசாரத்தை’ தொடங்க திட்டமிட்டிருந்தார். அதற்காக பிரசாந்த் கிஷோர் நேற்று முதல்வரின் கிராமத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் செல்ல முயன்றபோது காவல் துறையால் தடுக்கப்பட்டார். அப்போது பிரசாந்த் கிஷோர் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ‘முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்தி இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் முதல்வரின் கிராமத்திற்கு செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கூட்டத்திற்கு முன் அனுமதி பெறவில்லை எனக் கூறி காவல்துறை எங்களது வாகனத்தை தடுத்தனர். மற்ற கிராமங்களுக்கு சென்றபோது இதுபோன்ற அனுமதியை கேட்கவில்லை. ஆனால் முதல்வரின் கிராமத்திற்கு சென்ற போது தடுத்து நிறுத்துகின்றனர்.

அரசியல் அழுத்தத்தால் முதல்வரின் கிராமத்திற்கு செல்வதை தடுத்து நிறுத்தி உள்ளனர். மாவட்ட துணை ஆட்சியரிடம் (எஸ்.டி.எம்.) என்னை தடுத்ததற்கான சட்டப்பூர்வ காரணத்தை கேட்டுள்ளேன். முதல்வரின் சொந்த ஊரான கல்யாண் பிகாவில் நுழைய முடியாததால், பீகார் ஷரீஃபில் பொதுக்கூட்டம் நடத்தினோம். அங்கேயே கையெழுத்து பிரசாரத்தை தொடங்கினோம்’ என்றார். பீகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், ஆளுங்கட்சிக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் பிரசாரங்களை முன்ெனடுத்து வருவதால், அவரை காவல் துறையினர் தடுத்துள்ளனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

The post பீகார் முதல்வரின் கிராமத்திற்கு செல்ல முயன்ற பிரசாந்த் கிஷோர் தடுத்து நிறுத்தம்: போலீசாருடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Prashant Kishor ,Bihar ,Chief Minister ,Patna ,Jan Suraj Party ,Nitish Kumar ,Dinakaran ,
× RELATED அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை...