பென்னலூர் ஊராட்சியில் கால்வாய் வசதி இல்லாததால் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பென்னலூர் ஊராட்சியில் 600க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பென்னலூர் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் தெரு, பாரதி தெரு, பஜனை கோயில் தெரு, நடுத்தெரு, காமராஜர் தெரு உள்ளிட்ட 16 தெருக்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பல மாதங்களாக ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பென்னனூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* பென்னலூர் பக்கம் வராத பி.டி.ஓ.,…
பென்னலூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற போதிய நிதி ஆதாரம் இல்லை. இதனால், இந்த ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய், சாலை, மின் விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில், பலமுறை கோரிக்கை மனு கொடுக்கபட்டுள்ளது. ஆனால், இதுவரை ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்ததில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

The post பென்னலூர் ஊராட்சியில் கால்வாய் வசதி இல்லாததால் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: