பார்களை மூட வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து மதுபான பார் நடத்த டாஸ்மாக் நிர்வாகம் புதிதாக டெண்டர் கோரலாம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆறு மாதங்களில் டாஸ்மாக் பார்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. டாஸ்மாக் மதுபான கடை அருகில் திண்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிக்கும் பார்களை நடத்தும் உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2021ம் ஆண்டும், 2022ம் ஆண்டும் அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த டெண்டர் அறிவிப்புகளில், நில உரிமையாளர்களின் ஆட்சேபமில்லா சான்று வற்புறுத்தப்படவில்லை எனக் கூறி பார் உரிமம் பெற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சரவணன் 2021ம் ஆண்டு டெண்டர் அறிவிப்பை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களில் மூட வேண்டும் என்று 2022 ஜனவரி 31ம் தேதி உத்தரவிட்டார். அதேசமயம், 2022ம் ஆண்டு டெண்டரை எதிர்த்த வழக்குகளை விசாரித்த உயர் தனி நீதிபதி அனிதா சுமந்த், டெண்டரை ரத்து செய்ததுடன், புதிய டெண்டர் அறிவிப்பாணையை வெளியிடும்போது நில உரிமையாளரிடம் ஆட்சேபமில்லா சான்று பெற வேண்டும் என்று கடந்த 2022 செப்டம்பர் 30ம் தேதி உத்தரவிட்டார்.

இரு உத்தரவுகளை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த்து. மனுதார்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சிங்காரவேலன், சித்ரா சம்பத், வழக்கறிஞர் எம்.மணிமாறன் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் அனைவரும் நில உரிமையாளர்களிடம் ஆட்சேபமில்லா சான்று பெற்று சமர்ப்பிப்பது சாத்தியமற்றது.

அதை ஏற்றுக் கொண்டால் தற்போது உரிமம் பெற்றவர்கள் மட்டுமே டெண்டர் கோரி விண்ணப்பிக்க முடியும் என்று கூறி டெண்டரை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேலும், டெண்டர் காலம் முடிவடையும் நிலையில் உள்ளதால் புதிய டெண்டர் கோர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆறு மாதங்களில் டாஸ்மாக் பார்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. புதிதாக டெண்டர் கோர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதியளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post பார்களை மூட வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து மதுபான பார் நடத்த டாஸ்மாக் நிர்வாகம் புதிதாக டெண்டர் கோரலாம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: