- உச்ச நீதிமன்றம்
- ஹத்ராஸ்
- உயர் நீதிமன்றம்
- புது தில்லி
- போலோ பாபா
- புல்ராய்
- ஹத்ராஸ் மாவட்டம்
- உத்திரப்பிரதேசம்
- தின மலர்
புதுடெல்லி: ஹத்ராஸ் வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் போலோ பாபா எனும் சாமியார் நடத்திய மத வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “ஹத்ராசில் மாநில அரசு, உள்ளூர் நிர்வாகம், காவல்துறையினர் என பலரும் இந்த விவகாரத்தில் கடமை தவறி செயல்பட்டு உள்ளனர் என்பது தெளிவாகி உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதில் உயிரிழப்பு, கூட்டம் நடந்தது, எத்தனை பேர் இறந்தனர், அவர்களுக்கான இழப்பீடு என்ன,
மேலும் சட்டவிரோதமாக செயல்பட்டவர்களுக்கான தண்டனை என்ன என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இதுபோன்ற கூட்டங்களில் உயிரிழப்பு அல்லது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க உரிய நெறிமுறைகள் உருவாக்க உத்தரவிட வேண்டும். ஹத்ராஸ் நிகழ்வுக்கு காரணமாக அமைந்த அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
மேற்கண்ட மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது, “ஹத்ராஸ் நிகழ்வு என்பது மிகவும் வேதனையான ஒன்றுதான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதனை ரசிக்கவும் முடியாது. இருப்பினும் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும். அவர்களுக்கு வலுவான அதிகாரங்கள் உள்ளது. எனவே மனுதாரர் முதலில் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடரலாம்: என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி, இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தார்.
The post நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான ஹத்ராஸ் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல் appeared first on Dinakaran.