- அவினாசி
- அட்டிக்கடவு
- கோவாய்
- திருப்பூர்
- ஈரோடு
- பிரதம
- அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- கோவா
- திருப்பூர்
- தமிழக முதல்வர்
- பவானி நதி
- கோவா, திருப்பூர், ஈரோடு மாவட்டம்
- முதல் அமைச்சர்
ஈரோடு: 1045 குளங்களுக்கு தண்ணீர் வழங்கும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் 65 ஆண்டுகால கனவு திட்டமான அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி ஆறு, கேரள மாநிலத்தில் பயணித்து மீண்டும் தமிழ்நாட்டில் அத்திக்கடவு என்ற இடத்தில் பில்லூர் அணை வழியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து 75 கி.மீ. தூரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கின்றன. மொத்தம் 225 கி.மீ. தூரம் பயணிக்கும் பவானி ஆற்றில் ஆங்காங்கே வனப்பகுதியில் இருந்து வரும் சிற்றாறுகளும் கலக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின்போது, ஆற்றில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அவிநாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள அவிநாசி, அன்னூர், காரமடை, திருப்பூர், சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரிகளுக்கு குழாய் மூலம் தண்ணீரை கொண்டு சென்று நிரப்பி நிலத்தடி நீர் செறிவூட்டுதல் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்காக 1957ம் ஆண்டு முதன் முதலில் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பின்னர் பல்வேறு காலகட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக பலமுறை முயற்சிகள் மேற்கொண்டும் கைகூடவில்லை. 1972ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வர் கலைஞரால் கொள்கை ரீதியாக இத்திட்டம் ஏற்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் கிடப்பில் போடப்பட்டது.
அதன் பின்னர் 1990ம் ஆண்டு முதல்வர் கலைஞர் மீண்டும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த காலத்தை போலவே மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 65 ஆண்டுகளில் இத்திட்டம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தடைகளை தாண்டித்தான் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இத்திட்டம் நாளை (17ம் தேதி) நனவாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். திட்ட தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிரப்பப்படும். இதனால் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதோடு 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
1045 குளங்களுக்கும் தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்துள்ளோம்: அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
பவானிசாகர் அணையில் நடைபெற்ற நீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் பவானி நீரேற்று நிலையத்தில் நாளை (17ம் தேதி) அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் 1,045 குளங்களுக்கும் தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்துள்ளோம். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நீதிமன்ற உத்தரவின்படி இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்துக்கான பம்பிங் ஸ்டேஷன் ஒன்று முதல் மூன்று வரை கடந்த அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சி வந்த பின்புதான் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 65 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் அவிநாசி – அத்திக்கடவு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.