சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த மலேசிய வாழ் இந்திய வம்சாவளி தம்பதிக்கு, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் தாலியை கழற்றும்படி நிர்ப்பந்தம் செய்ததாகவும், சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மலேசிய வாழ் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் சமீபத்தில், தான் மலேசியாவில் இருந்து இந்திய விமான நிலையம் வந்து இறங்கிய போது, சுங்க அதிகாரிகள் தாலியை கழற்ற சொன்னதாகவும், மறுத்ததால் 2 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த செய்தி முற்றிலும் தவறானது. மேலும் உண்மைக்கு புறம்பானது. அன்றைய தினம், இரண்டு வெளிநாட்டு பயணிகள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிக அளவில் தங்க நகைகளை அணிந்து வெளியேற முயன்றதை பணியில் இருந்த சுங்க அதிகாரிகள் கவனித்தனர். இதையடுத்து அவர்களை நிறுத்தி, அந்த நகைகள் குறித்த விவரங்களை கேட்டனர். அவைகள் எங்கள் சொந்த நகைகள் என்று கூறி, விவரங்கள் அளிக்க மறுத்துவிட்டனர். அந்த பெண் குறிப்பிட்டது போல் தாலியை கழட்டுமாறு சுங்க அதிகாரிகள் கூறவில்லை.
சுங்க அதிகாரிகள் நீண்ட நேரம் சுங்க விதிகளை பற்றி விளக்கிய பின்பு, பெண்ணின் கணவர் மட்டும் தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் தங்க காப்பை சோதனைக்கு உட்படுத்த அனுமதித்தார். அந்த தங்க நகைகளின் எடை 285 கிராம் (சுமார் 35 சவரன்). அதன் இந்திய மதிப்பு ரூ.15 லட்சம். எனவே அந்த நகைகளுக்கு ரூ.6.5 லட்சம் சுங்கவரி விதிக்கப்பட்டது. அதை கட்டுவதற்கு மறுத்து விட்டனர். எனவே அந்த நகை கைப்பற்றப்பட்டு, பயணிகளிடம் ரசீது வழங்கப்பட்டது. மேலும் அந்த நகைகள் மீது உரிய சுங்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 23.7.2023 அன்று, அவர்கள் மலேசியா திரும்பும் போது, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திய பின்பு, உடனடியாக நகைகள் ஒப்படைக்கப்பட்டன. இந்திய சுங்கத்துறை பயண உடமைகள் 2016ன்படி, இந்தியாவில் வசிப்போர் மற்றும் இந்திய வம்சாவளி வெளிநாட்டு பயணிகள் ரூபாய் ஐம்பதாயிரம் வரை மதிப்புள்ள நகைகளை, சுங்கவரி செலுத்தாமல் இந்தியாவிற்குள் கொண்டு வரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னை விமான நிலையத்தில் மலேசிய பெண்ணின் தாலியை கழற்ற அதிகாரிகள் நிர்ப்பந்தமா?. சுங்கத்துறை மறுப்பு appeared first on Dinakaran.