×

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று வங்கதேசத்தை வீழ்த்தியது பாக்.

லாகூர்: ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியுடன் மோதிய பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். முகமது நயிம், மெஹிதி ஹசன் மிராஸ் இணைந்து வங்கதேச இன்னிங்சை தொடங்கினர். நசீம் ஷா வேகத்தில் மெஹிதி ஹசன் மிராஸ் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற வங்கதேச அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே லிட்டன் தாஸ் 16 ரன், முகமது நயிம் 20 ரன், தவ்கித் ஹ்ரிதய் 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, வங்கதேசம் 9.1 ஓவரில் 47 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கேப்டன் ஷாகிப் ஹசன் – முஷ்பிகுர் ரகிம் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்து அசத்தியது. ஷாகிப் 53 ரன் (57 பந்து, 7 பவுண்டரி) விளாசி அஷ்ரப் பந்துவீச்சில் பகார் ஸமானிடம் பிடிபட்டார். ஷமிம் உசேன் 16 ரன், முஷ்பிகுர் ரகிம் 64 ரன் (87 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த டஸ்கின் அகமது (0), ஷோரிபுல் இஸ்லாம் (1) வந்த வேகத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

வங்கதேசம் 38.4 ஓவரிலேயே 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹசன் மகமூத் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராவுப் 4, நசீம் ஷா 3, அப்ரிடி, அஷ்ரப், இப்திகார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 39.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து வென்றது. பகார் ஸமான் 20, கேப்டன் பாபர் ஆஸம் 17, இமாம் உல் ஹக் 78 ரன் (84 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். முகமது ரிஸ்வான் 63 ரன் (79 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஆஹா சல்மான் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் டஸ்கின், ஷோரிபுல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. நாளை மறுநாள் நடக்கும் சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

The post ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று வங்கதேசத்தை வீழ்த்தியது பாக். appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Bangladesh ,Super 4 round ,Asia Cup ,Lahore ,Asia Cup One Day Cricket Series ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை