×

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்: கூடுதலாக 3 தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக மேலும் 3 தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 உரிமை தொகையாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்கி பெண் உரிமை காத்திட்ட மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவை போற்றிடும் வகையில் இத்திட்டத்திற்கு ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க பெண்ணின் வருமானம் மட்டுமல்லாமல் குடும்ப வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால், குடும்பத்தில் உள்ளவர்களின் வருமானம் ஆண்டு ஒன்றுக்கு 2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். சொந்த பயன்பாட்டிற்கு கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் திட்டத்தில் பயனாளராக இணைய முடியாது. 5 ஏக்கருக்கு அதிகமாக நன்செய் நிலமும், 10 ஏக்கருக்கு அதிகமாக புன்செய் நிலமும் வைத்திருக்கும் குடும்பத்தினரும் விண்ணப்பிக்க முடியாது.

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது என பல்வேறு விதிகள் என்பது இருந்தன. இதனால், தகுதி இருந்து தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பல பெண்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் கலைஞர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை 15ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், கடந்த முறை விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் என அனைவரும் இந்த முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், ஜூலை மாதம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடியாக முடிவு அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக மேலும் 3 தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம். அரசு துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களை சேர்ந்த பெண்களும், தகுதியானவர்கள் மற்றும் விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்: கூடுதலாக 3 தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்