ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவு ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை போலீஸ்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவு ரவுடி சம்போ செந்திலை பிடிக்க சென்னை போலீஸ் துபாய் விரைகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, கடந்த ஜூலை 5-ஆம் தேதி சிலர் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர். அவரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் முன்விரோதம் மற்றும் பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. தொடர்ந்து, இந்த கொலைவழக்கில் 27 நபர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசாரால் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கையில் A1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் A2 குற்றவாளியாக தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்போ செந்தில் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய ரவுடி சம்போ செந்திலை பிடிக்க ஓரிரு நாட்களில் விமானம் மூலம் சென்னை காவல்துறை துபாய் செல்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2-வது எதிரியாக ரவுடி சம்போ செந்தில் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. சம்போ செந்தில் துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தனிப்படை போலீசார் அங்கு செல்கின்றனர். சம்போ செந்திலுக்கு எதிராக ஏற்கனவே ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவு ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: