லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் 4வது முறையாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்: பரபரப்பு தகவல்

நெல்லை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய மோட்டார் வாகன பெண் இன்ஸ்பெக்டர், தற்போது 4வது முறையாக பிடிபட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டம், தமிழ்நாடு-கேரள எல்லையில் உள்ள புளியரை செக்போஸ்டில் லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக மோட்டார் வாகன பெண் இன்ஸ்பெக்டர் பிரேமா ஞானகுமாரி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கினார். அவரது காரில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 400ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து நெல்லை பெருமாள்புரம், கிருஷ்ணா நகரிலுள்ள அவரது வீட்டில் சோதனை நடந்தது. இதில் பாளையில் திருமண மண்டபம், நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களா மற்றும் நாகர்கோவில், அழகிய மண்டபம் ஆகிய இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்தது தொடர்பான 12 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து மோட்டார் வாகன பெண் இன்ஸ்பெக்டர் பிரேமா ஞானகுமாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அவர் அதிரடியாக சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிரேமா ஞானகுமாரி, ஏற்கனவே 3 முறை லஞ்சம் வாங்கி சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2010ல் கர்நாடக எல்லையான ஓசூர் செக்போஸ்ட்டிலும், 2013ல் கேரள எல்லையான கோவை செக்போஸ்ட்டிலும், 2021ல் வேலூர் மாவட்டம் – காட்பாடி செக்போஸ்ட்டிலும் கணக்கில் வராத பணத்துடன் சிக்கியுள்ளார். தற்போது 4வது முறையாக புளியரை செக்போஸ்ட்டில் பிடிபட்டுள்ளார். பிரேமா ஞானகுமாரி மீதான வழக்குகள் லஞ்ச ஒழிப்பு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் 4வது முறையாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்: பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: