அண்ணாமலை பாதயாத்திரையில் பாஜவினர் நடுரோட்டில் மோதல்: மாவட்ட தலைவர்-மாஜி எம்எல்ஏ இடையே தள்ளுமுள்ளு; சாலையை முடக்கியதால் 2 கி.மீ தூரம் நடந்த மாணவர்கள்

காரைக்குடி: அண்ணாமலை பாதயாத்திரையில் மாவட்ட தலைவர்-மாஜி எம்எல்ஏ இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அண்ணாமலையை வரவேற்க சாலையை முடக்கியதால் 2 கி.மீ தூரம் மாணவர்கள் நடந்த சென்ற அவலம் நடந்துள்ளது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஐந்தாம் நாள் பாத யாத்திரை நேற்று காலை மானாமதுரையை முடித்து விட்டு, காரைக்குடிக்கு மாலை 4.30 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய இந்த முக்கிய சாலையை மறித்து, நேற்று மாலை 3 மணி முதல் பாஜவினர் நின்று போக்குவரத்தை முடக்கினர். ரோட்டுக்கு நடுவில் செண்டை மேளம், கரகாட்டம் என நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், தாங்களும் நடுரோட்டில் குத்தாடம் போட்டனர்.

மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி சென்று திரும்பிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் சுமார் 2 கிமீ தூரத்திற்கு மேல் நடைபயணமாகச் சென்று பஸ்களில் ஏறி வீட்டிற்கு சென்றனர். இது ஒருபுறமிருக்க, பாஜ மகளிரணிக்கு அண்ணாமலையை வரவேற்க இப்பகுதியில் சிறிய குடம் வைத்து, அதில் தேங்காய் வைத்து கும்பம் காட்டி வரவேற்கும் வகையில் செம்பு கொடுக்கப்பட்டது. இதனை வாங்குவதற்கு பெண்கள் பெரிதும் போட்டி போட்டதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மூதாட்டி ஒருவரும் கீழே விழுந்து காயமடைந்தார். அண்ணாமலையை வரவேற்க ஒரு சில தனியார் பள்ளிகளை அணுகி, சீருடையுடன் மாணவர்களை அழைத்து வந்து கையில் பாஜ கொடியை கொடுத்து காக்க வைத்திருந்தனர்.

இந்நிலையில் அண்ணாமலையை வரவேற்க பாஜ மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் ஒரு தரப்பு காத்திருந்தது. அப்போது அதிமுகவில் இருந்து விலகி, பாஜவில் சேர்ந்துள்ள முன்னாள் எம்எல்ஏ சோழன் சித பழனிசாமி, காரைக்குடிக்கு ஒரு கிமீட்டருக்கு முன்னதாகவே கோவிலூர் பகுதியிலேயே அண்ணாமலையை இறக்கி, அவருக்கு வரவேற்பும் அளித்து முடித்தார். அண்ணாமலையிடமிருந்து கிளம்பிய சோழன் சித பழனிசாமி அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்து இறங்கினார்.

அப்போது அங்கு அண்ணாமலையை வரவேற்க காத்திருந்த மாவட்ட தலைவர் மேப்பல் சக்திக்கு, கோவிலூரில் வரவேற்பு அளித்து இறக்கி விட்டு, அவர் அங்கிருந்து நடைபயணத்தை துவக்கியது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மேப்பல் சக்தியும், அவரது ஆதரவாளர்களும், முன்னாள் எம்எல்ஏ சோழன் சித பழனிசாமியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு ஆதரவாளர்களும் தொடர்ந்து வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. வெகு நேரத்திற்கு பிறகு கட்சி நிர்வாகிகளின் சமாதானத்தை ஏற்று இருதரப்பும் கலைந்து சென்றது. அண்ணாமலையை வரவேற்க
ஒரு சில தனியார் பள்ளிகளை அணுகி, சீருடையுடன் மாணவர்களை அழைத்து வந்து கையில் பாஜ கொடியை கொடுத்து காக்க வைத்திருந்தனர்.

The post அண்ணாமலை பாதயாத்திரையில் பாஜவினர் நடுரோட்டில் மோதல்: மாவட்ட தலைவர்-மாஜி எம்எல்ஏ இடையே தள்ளுமுள்ளு; சாலையை முடக்கியதால் 2 கி.மீ தூரம் நடந்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: