அண்ணாமலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் எடப்பாடிக்கு பாஜ பகிரங்க மிரட்டல்: ‘தொடர்ந்து விமர்சித்தால் மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்

* ‘ஜெயலலிதா என நினைக்க வேண்டாம்’ செல்லூர் ராஜூ, ஜெயக்குமாருக்கு எச்சரிக்கை

மதுரை: ‘அண்ணாமலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம்’ என்று எடப்பாடிக்கு பாஜ பகிரங்க எச்சரிக்கை விடுத்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகர் மாவட்ட பாஜ தலைவர் மகா.சுசீந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம். பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை உங்கள் இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தங்கள் இயக்க தலைவர்கள், ஜெயலலிதா போன்று தங்களை நினைத்துக் கொண்டு, அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருவதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சுக்குநூறாக உடைந்து போன அதிமுகவை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தங்களுடைய தோழமை இயக்கம் என்ற பரிவுடன் மீண்டும் ஒன்றிணைத்து, சட்டசபையில் 66 எம்எல்ஏக்களை இடம் பெற வைத்ததை நன்றி மறந்து விட்டீர்கள்.

இனிவரும் காலங்களில் கூட்டணியின்றி, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 17 சதவீத வாக்கு வங்கியை கடந்து செல்கின்ற பாஜவுடன் போட்டியிட தயாரா? நாங்கள் தேர்தல் களத்தில் பணி புரிபவர்கள். உங்களுடைய பலமும், பலவீனமும் எங்களுக்கு தெரியும். அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடி எடுத்து எங்களுடைய தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும் என்று கருதுகிறீர்கள்? அண்ணாமலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
பாஜ நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டதால், தமிழகத்தில் 10 மாநகராட்சி மேயர் பதவியையும் தாங்கள் இழந்ததை மறந்து விட வேண்டாம். இனி வரும் காலங்களில் உங்கள் இயக்க தலைவர்கள், அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்களை அள்ளி வீசினால், உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீதான ஊழலை பொதுமக்கள் மத்தியில் எடுத்து உரைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post அண்ணாமலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் எடப்பாடிக்கு பாஜ பகிரங்க மிரட்டல்: ‘தொடர்ந்து விமர்சித்தால் மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் appeared first on Dinakaran.

Related Stories: