ராமநாதபுரம்: பாஜ தலைவர் அண்ணாமலை யாத்திரையின் மூன்றாம் நாளான நேற்று, முதுகுளத்தூரில் பஸ்களை பாஜவினர் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். தடுக்க வந்த டிஎஸ்பியுடன் பாஜ நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தகராறில் ஈடுபட்டார். இதனால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் துவக்கி நடத்தி வருகிறார். நேற்று காலை 9 மணிக்கு முதுகுளத்தூரில் பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் காலை 9 மணி முதலே பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதுகுளத்தூர் காந்தி சிலை பகுதியில் கூடியிருந்தனர். அப்பகுதி, பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர், கமுதி – கடலாடி பிரதான சாலை என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாமலை, திரு உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர், மரகத நடராஜர் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்றார். அங்கிருந்து, பாதயாத்திரை துவங்கும் முதுகுளத்தூர் பகுதிக்கு 11.50 மணிக்கே வந்தார். அவர் வரும் வரை, அப்பகுதியில் பஸ் போக்குவரத்தை பாஜ தொண்டர்கள் நிறுத்தியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் பஸ்களில் இருந்து இறங்கி வெயிலில் நடந்து செல்லத் துவங்கினர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கமுதி டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
உடனே அங்கு தொண்டர்களுடன் வந்த பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, டிஎஸ்பி மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டு கடும் வாக்குவாதம் செய்தார். பஸ்களை இயக்கக்கூடாது என்று கையை உயர்த்தி கோபமாக பேசினார். அவருடன் வந்த தொண்டர்களும் ஆவேசப்பட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த பாஜ மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், அமர்பிரசாத் ரெட்டியை அழைத்து சென்றார். பாஜவினரின் இந்தச் செயலால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், பஸ்களில் இருந்து கைக்குழந்தைகளுடன் பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.
*ஆளே இல்லாத கடையில்…
முதுகுளத்தூரில் காந்தி சிலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை அரை கிலோ மீட்டர் தூரம் சாலையில் அண்ணாமலை நடந்து வந்தார். அவருடன் தொண்டர்கள் கோஷம் எழுப்பியபடி வந்தனர். சாலையில் இருபுறமும் பெரிதாக கூட்டமே இல்லை. இருப்பினும் அண்ணாமலை கைகூப்பியபடியே வந்தார். இதை பார்த்த ஒரு சிலர் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துற கதை இதுதானோ என்று கமென்ட் அடித்தனர்.
The post முதுகுளத்தூரில் அண்ணாமலை பாதயாத்திரை பஸ்களை நிறுத்தி பாஜ ரகளை குழந்தைகளுடன் பெண்கள் அவதி: 2 கி.மீ நடந்து சென்ற பரிதாபம், தட்டிக்கேட்ட டிஎஸ்பிக்கு மிரட்டல் appeared first on Dinakaran.